1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2 ஆம் தேதி இதே நாளில் பி.மாதவன் இயக்கிய மன்னவன் வந்தானடி திரைப்படம் வெளியானது. 47 வருடங்களுக்கு முன் வெளியான அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்திருந்தார். மஞ்சுளா, ஜெயசுதா என இரு நாயகிகள். பி.மாதவன் படத்தை இயக்கியிருந்தார். படம் நல்ல வரவேற்புடன் வெற்றி பெற்றது.
பி.மாதவன் வாலாஜாபாத்தைச் சேர்ந்த எம்ஏ பட்டதாரி. பழம்பெரும் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் பிறகு ஸ்ரீதரிடம் சினிமா கற்றுக் கொண்டார். மணி ஓசை திரைப்படத்தின் மூலம் 1963 இல் இயக்குநரானார். முதல் படம் சரியாகப் போகவில்லை. எனினும், ஸ்ரீதரிடம் அவர் கற்றுக் கொண்ட தொழில் நேர்த்தி படத்தில் பிரதிபலிக்கவே, சிவாஜி கணேசன் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை பி.மாதவனுக்கு தந்தார். அவர்கள் கூட்டணியில் அன்னை இல்லம் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத் தொர்ந்து எம்ஜிஆரின் தெய்வத் தாய் திரைப்படத்தை இயக்கினார். அதில் அவருக்கும், எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, மீண்டும் சிவாஜியை வைத்து படங்கள் இயக்கினார். எம்ஜிஆர் பக்கம் செல்லவில்லை.
அப்போது சிவாஜி - பீம்சிங் இணை பிரபலமாக இருந்தது. பி.மாதவன் சிவாஜியை வைத்து எங்க ஊரு ராஜா, வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, சபதம், தேனும் பாலும், ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், மனிதனும் தெய்வமும், மன்னவன் வந்தானடி என தொடர் வெற்றிகளை தந்து பீம்சிங்குக்கு இணையான கூட்டணியாக பேசப்பட்டார்.
யாராக இருந்தாலும் தோல்விகளும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. அதன் பிறகு சிவாஜியை வைத்து அவர் இயக்கிய சில படங்களும், பிற நடிகர்களை வைத்து இயக்கிய படங்களும் சரியாகப் போகாமல் பி.மாதவனின் மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் கன்னடத்தில் ராஜ்குமார் மூன்று வேடங்களில் நடித்த சங்கர் குரு படத்தின் தமிழ் உரிமையை சிவாஜி பிலிம்ஸ் வாங்கியது.
அதனை ரீமேக் செய்ய பி.மாதவனுக்கு முன் பணம் தந்தனர். ஆனால், சொந்தப்பட வேலையில் இருந்த பி.மாதவன் படத்தை இயக்காமல் முன்பணத்தை திருப்பிக் கொடுத்தார். பிறகு கே.விஜயனை வைத்து சங்கர் குருவை தமிழில் ரீமேக் செயதனர். அதுதான் இன்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த திரிசூலம் திரைப்படம். அதன் பிறகு பி.மாதவன் இயக்கிய படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. சிவாஜி நடிப்பில் அவர் கடைசியாக தந்த வெற்றிப் படம்தான் 47 வருடங்களுக்கு முன் வெளியான மன்னவன் வந்தானடி.
இந்தப் படத்தில் கோடீஸ்வரனாகவும், கோமாளியாகவும் இருவேறு நடிப்பினை நடிகர் திலகம் தந்திருந்தார். மஞ்சுளா நாயகி. வில்லன் நம்பியார். அந்தக் காலத்தில் ஜெயசுதா கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்தார். மாறாக, மன்னவன் வந்தானடியில் இழுத்துப் போர்த்தி நடிக்கும் முக்கியமான வேடம். சுகுமாரி, செந்தாமரை, நாகேஷ் உள்பட பலரும் நடித்திருந்தனர். கோமாளி சிவாஜியும், நாகேஷும் அடிக்கும் லூட்டி திரையரங்கில் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. மன்னவன் வந்தானடி வெளியான நேரத்தில் நாகேஷின் புகழ் சற்று மங்கி இருந்தது. மன்னவன் வந்தானடி ஒருவகையில் அவரது கம்பேக் திரைப்படம். இதனை கல்கி பத்திரிகை, 'நாகேஷ் தனது பழைய இடத்தைப் பிடித்துவிட்டார்' என எழுதியது.
மன்னவன் வந்தானடிக்குப் பிறகு பெரிய வெற்றிகள் எதுவும் பி.மாதவனக்கு அமையவில்லை. சொந்தப் படம் காரணமாக சிவாஜி கூப்பிட்டு அளித்த திரிசூலம் பட வாய்ப்பையும் மறுதலித்தார். இறுதியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தனது தனிச் செயலாளராக அவரை நியமித்துக் கொண்டார். அத்துடன் எம்ஜிஆர் திரைப்பட நகரின் மேற்பார்வை பொறுப்பையும் அவருக்கு அளித்தார்.