ஹரி இயக்கத்தில் தனது 33 வது படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்தப் படத்தின் பூஜை மார்ச் மாதம் சென்னையில் நடந்தது. அருண் விஜய், ஹரி உள்ளிட்ட படக்குழு இதில் கலந்து கொண்டது. இன்னும் பெயரிடப்படாத இந்த ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பை ஹரி பழனியில் தொடங்கினார். ஹரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட, மீண்டும் ஜுலையில் தொடங்கியது. ஊரடங்கால் மீண்டும் தடைபட்ட படப்பிடிப்பை தற்போது ராமேஸ்வரத்தில் தொடங்கியுள்ளார் ஹரி. அருண் விஜய்யுடன் பாடலாசிரியர் சினேகன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி ப்ரியா பவானி சங்கர். ராதிகா சரத்குமார் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை காரைக்குடியில் ஹரி படமாக்கியுள்ளார். பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், ஐஸ்வர்யா, ஜெயபாலன் உள்ளிட்டவர்களும் படத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் படமான இதன் பெரும்பாலான காட்சிகள் ராமேஸ்வரத்தில் எடுக்கப்படுகின்றன. அத்துடன் தூத்துக்குடி, காரைக்குடி, ராம்நாடு ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்துகின்றனர். சென்னையிலும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.