ஹே சினாமிகா (தமிழ்): பிரபல நடன இயக்குனர் பிருந்தா முதல் முறையாக இயக்குனர் ஆகியிருக்கும் திரைப்படம். துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் நடித்துள்ள இது ரொமான்டிக் திரைப்படமாக உருவாகியுள்ளது. திருமணத்துக்கு பிந்தைய உறவை மையப்படுத்திய கதை இது. இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இளம் காதலர்களும். திருமண முடித்தவர்களும் பார்க்க வேண்டிய படம்.
தி பேட்மேன் (ஆங்கிலம், தமிழ்): டிசி காமிக்ஸின் பேட்மேன் நாளை வெளியாகிறது. ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளில் தமிழகத்தில் படம் வெளியாகிறது. மேட் ரீவ்ஸ் படத்தை இயக்கியுள்ளார். கிறிஸ்டியன் பேல், பென் அப்ஃலெக் நடித்த பேட்மேன் வேடத்தில் முதல்முறையாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார். இவர் ட்விலைட் சாகா திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர். தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ் படங்களை போல இந்த பேட்மேன் ரசிகர்களை கவருமா என்பது நாளை தெரியும்.
பீஷ்ம பர்வம் (மலையாளம்): மலையாளத்தில் மோகன்லால் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. மம்முட்டி ரசிகர்களை குஷிப்படுத்த வந்திருக்கும் படம் பீஷ்ம பர்வம். அமல் நீரத் படத்தை இயக்கியிருக்கிறார். இவரது முதல் படம் பிக் பி யில் மம்முட்டி நடித்திருந்தார். மேக்கிங்கிற்காக ஓடிய படம் அது. படம் இன்று வெளியாகியுள்ளது. பாஸிடிவ் விமர்சனங்கள் படத்துக்கு கிடைத்துள்ளன.
நாரதன் (மலையாளம்): மின்னல் முரளி படத்தை தொடர்ந்து டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நாரதன். ஆஷிக் அபு படத்தை இயக்கியுள்ளார். மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர் ஆஷிக் அபு. அவரது முந்தைய படமான மாய நதியிலும் டொவினோ தாமஸே நடித்திருந்தார். மலையாளத்தின் பிரபல எழுத்தாளர் உண்ணி ஆர். நாரதன் படத்தின் கதையை எழுதியுள்ளார். தொலைக்காட்சிகளின் அரசியலை இந்தப் படம் பேசுகிறது. படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆடவல்லு மீக்கு ஜோகர்லு (தெலுங்கு): சர்வானந்த் நடித்திருந்கும் இந்தத் தெலுங்குப் படமும் நாளை வெளியாகிறது. கிஷோர் திருமலா எழுதி இயக்கியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, ராதிகா சரத்குமார், ஊர்வசி என பலர் நடித்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு அறிமுகமான முகங்கள் அதிகம் இருப்பதால் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
ஜுகுந்த் (இந்தி): இந்த இந்திப் படம் நாளை வெளியாகிறது. ப்ரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்த தனுஷ் சூப்பர், பென்டாஸ்டிக், மைண்ட் ப்ளோவிங் என மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். படத்தை நாகராஜ் மஞ்சுலே இயக்கி உள்ளார். பிரதான வேடத்தில் அமிதாப் நடித்துள்ளார். இந்தவாரம் பார்க்கவேண்டிய திரைப்படங்களில் முதலிடத்தில் நாகராஜ் மஞ்சுலேயின் இந்தத் திரைப்படம் உள்ளது. தவறவிடாதீர்கள்.