மேலே உள்ள வசனங்கள் இடம்பெற்றது ஒரு தமிழ்ப் படத்தில். இன்றாக இருந்தால் இந்த வசனங்களுக்காக கலவரமே நடத்தப்பட்டிருக்கும். சென்சார் தயவு பார்க்காமல் இந்த வசனங்களை கத்தரித்திருக்கும். 48 வருடங்களுக்கு முன் நமது தமிழ்நாடும், தமிழ் சினிமாவும் இன்றைவிட முற்போக்காகவும், எதிர்கருத்துக்களை அனுமதிப்பதாகவும் இருந்துள்ளது.
முருகன்தான் எல்லாம் என்று மனதார நம்பும் நல்ல உள்ளம் குமரைய்யா. மனைவி, மகனுடன் ஒரு தம்பியும் உண்டு. தம்பி சுந்தரம் அண்ணனுக்கு நேர் எதிர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இல்லாத கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து அதனை எதிர்ப்பவன். இந்த எதிரெதிர் வேடங்களை சிவாஜி கணேசன் பிரமாதமாக படத்தில் பண்ணியிருந்தார். எனினும், படத்தில் முந்துவது சுந்தரம்தான்.
ரயிலில் இருந்து கீழே விழப்போகும் குழந்தையை சுந்தரம் காப்பாற்றி தாயிடம் கொடுக்க, 'அந்த முருகன்தான் குழந்தையை காப்பாற்றினார்' என்று அந்த அம்மா சொல்ல, 'குழந்தையை காப்பாற்றுனது நான், பாராட்டு முருகனுக்கா. முருகன் மயில்லதான் வருவார், ரயில்ல வரமாட்டார்' என்ற நக்கலுடன் சுந்தரத்தின் அறிமுகம் இருக்கும். . இதேபோல் படம் நெடுக நாத்திக கருத்துக்களை பேசவிட்டிருப்பார்கள். சரி, கதை?
குமரய்யா பூசாரியாக இருக்கும் கோயிலின் தர்மகர்த்தாவாக இருப்பவர் தர்மலிங்கம். ஊர் பிரசிடென்ட். கிராமத்து பள்ளிக்கு வரும் சலுகைகளை தானே அனுபவிப்பவர். சுந்தரம் நண்பர்களுடன் சேர்ந்து இதனை தட்டிக் கேட்பார். கூடவே தர்மகர்த்தாவின் அக்கா மகளை காதலிப்பார். தர்மலிங்கத்தின் பொறுப்பிலிருந்த பள்ளி சுந்தரத்தின் கைகளுக்கு வரும். அந்த கோபத்தில் குமரய்யாவை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, கோயில் நகைகளை கொள்ளையடித்து, பழியை சுந்தரம் மீது போடுவார். நகையை தேடும் போது குமரய்யா, சுந்தரத்தின் தாத்தா புதைத்து வைத்த குடும்பச் சொத்து கிடைக்கும். அது முருகன் கோயிலுக்கு என்பார் குமரய்யா. இல்லை பள்ளிக்கும், ஏழை மக்களுக்கும்தான் என்பார் சுந்தரம்.
இல்லாத கடவுளுக்கு எதற்கு சொத்து என்ற கேள்வியால் துடித்துப் போகும் குமரய்யா, கடவுள் இருக்கிறார், அவர் கோயில் கலசத்தை திருப்பி, அவர் இருப்பதை உணர்த்துவார் என சவால்விடுவார். அப்படி கடவுள் இருப்பதை நிரூபித்தால் கிடைத்த புதையலை கோயிலுக்கே தந்துவிடுகிறேன் என்பார் தம்பி சுந்தரம். குமரய்யா சொன்னது போலவே கோயில் கலசம் திரும்பும். ஆனால், அதனை திருப்பியது சுந்தரம். கடவுள் வர மாட்டார் என அண்ணனுக்காக அதனை தம்பி செய்திருப்பார்.
கதையை படிக்கையில் நாத்திகத்தின் கை ஓங்கியிருப்பது போல் தெரிகிறது அல்லவா. இப்படியே விட்டால் ஆத்திகர்கள் எப்படி படம் பார்ப்பார்கள். அதனால், 'எனக்கு மேல் ஒரு சக்திதான் கலசத்தை திருப்ப வைத்தது' என தம்பி சொல்ல, அந்த சக்திதான்டா கடவுள் என அண்ணன் ஒரே போடாகப் போட்டு கடவுளையும், ஆத்திகர்களையும் காப்பாற்றுவார்.
1968 இல் நாகேஸ்வரராவ் நடிப்பில் தெலுங்கில் வெளியான புத்திமந்துடு படத்தின் தமிழ் தழுவல்தான் மனிதனும் தெய்வமாகலாம். பி.மாதவன் படத்தை இயக்க, குமரய்யாவின் மனைவியாக சௌகார் ஜானகியும், சுந்தரத்தின் காதலியாக உஷா நந்தினியும், அவரது தாயாராக சுகுமாரியும், தர்மகர்த்தாவாக எம்.ஆர்.ஆர்.வாசுவும், அவரது கணக்குப்பிள்ளையாக வி.கே.ராமசாமியும் நடித்திருந்தனர். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன்.
சுதந்திரப்போராட்ட வீரரும், தமிழறிஞரும், சிவாஜி ரசிகர் மன்றத் தலைவராக சிறிது காலம் பொறுப்பு வகித்த சின்ன அண்ணாமலை இந்தப் படத்தை தயாரித்தார். சிவாஜியை வைத்து அவர் தயாரித்த முதல் படம் இதுவாகும். பொறிபறக்கும் நாத்திக கருத்துக்களுக்காக படத்தை இப்போதும் பார்க்கலாம். மனிதனும் தெய்வமாகலாம் வெளியாகி இன்றோடு 48 வருடங்கள் நிறைவடைகிறது.