250 கோடி இந்திய திரையரங்கு வசூலை வேகமாக எட்டிய படங்களின் பட்டியலைப் பார்த்தால், இந்தி சினிமாவுக்கு நேர்ந்திருக்கும் நெருக்கடி புரியும். நேரடி இந்திப் படங்களில் குறைந்த நாள்களில் இந்திய திரையரங்குகளில் 250 கோடிகள் வசூலித்த திரைப்படம் சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹே. 10 தினங்களில் 250 கோடிகளை வசூலித்தது. ரன்பீர் கபூர் நடித்த சஞ்சு, அமீர் கானின் தங்கல் ஆகிய படங்களும் 10 தினங்களில் 250 கோடிகளை வசூலித்தன. இதனை பாகுபலி 2 படத்தின் இந்திப் பதிப்பு முறியடித்து 8 தினங்களில் 250 கோடிகளை வசூலித்தது. இப்போது கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் இந்திப் பதிப்பு 7 தினங்களில் 250 கோடிகளை இந்தியத் திரையரங்குகளில் வசூலித்து முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தப் பட்டியலில் நேரடி இந்திப் படங்களை பின்னுக்குத் தள்ளி தெலுங்கு, கன்னடப் படங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தமிழ் சினிமா இல்லை. இப்போதுதான் நாங்கள் இப்படி, முன்பு அடித்து தூள் கிளப்பினோம் என்று சொல்ல முடியுமா?
பத்து வருடங்களுக்கு முன்னால், 2012 இல் தெலுங்கு, தமிழ் திரையுலகங்கள் எப்படி இருந்தன? 2012 இல் இரண்டு திரையுலகிலும் தலா 300 திரைப்படங்கள்வரை எடுக்கப்பட்டன. இதில் திரைக்கு வந்த தமிழ்ப் படங்களில் துப்பாக்கி, ஒரு கல் ஒரு கண்ணாடி இரண்டும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கும்கி, சுந்தர பாண்டியன் ஆகிய நான்கும் ஹிட் படங்கள். மெரினா, கழுகு, மனம் கொத்திப் பறவை ஆகிய மூன்றும் முதலுக்கு மோசமின்றி ஓடின. இந்த ஒன்பது படங்கள்தான் 2012 ஆம் ஆண்டில் நாம் நேர்மறையாகச் சொல்லக் கூடிய தமிழ்ப் படங்கள்.
தெலுங்கில் அந்த வருடம் ஜனவரியில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. தபாங் படத்தின் தமிழ் ரீமேக்கான ஒஸ்தி ப்ளாப்பாக, தெலுங்கு ரீமேக்கான பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங் 11 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு மெகாஹிட் படமாக அமைந்தது. 28 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், உலக அளவில் சுமார் 120 கோடிகளை வசூலித்தது. ராஜமௌலியின் ஈகா (தமிழில் நான் ஈ) தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வசூல் சாதனைப் படைத்தது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி திரையரங்குகளில் மட்டும் 55 கோடிகளை வரிலித்து தனது வெற்றியை பதிவு செய்தது. இவை தவிர தமருகம், சுடிகாடு, லவ் பெயிலியர், இஷ்க், கேமராமேன் கங்கா தோ ராம்பாபு உள்பட பல படங்கள் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தன. எதிர்பார்த்த வசூல் இல்லை என்று சொல்லப்பட்ட ராணா, நயன்தாரா நடித்த கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் படம் திரையரங்குகளில் 47 கோடிகளை வசூலித்தது.