லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், 'முதலும் நீ முடிவு நீ' ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தற்போதைய சூழலில் இருக்கும் ஒரு இளைஞனின் பின்னணியில் டாடா திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெறுகின்றன. இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 10-ம் தேதி முதல் சிம்ப்லி சவுத் என்ற ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இது அமேசானிலும் ரிலீஸ் ஆகிறது.
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கத்தில் 'ரன் பேபி ரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி வெளியானது. இதற்கு முன்பு எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. ஆனால் இந்த முறை திரில்லர் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். இதில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா, இயக்குனர் தமிழ் உள்ளிடவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 10-ம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
மலையாளத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் 'கிறிஸ்டி'. இந்தப் படத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வயதான பெண்ணை காதலிக்கும் பதின் வயது சிறுவனின் கதை என்று கூறப்படுகிறது. அல்வின் ஹென்றி இயக்கியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 17-ம் தேதி திரைக்கு வந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தில் டியூசன் டீச்சராக மாளவிகா நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 9-ம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
ராணா டகுபதி, வெங்கடேஷ் டகுபதி ஆகியோர் நடிப்பில் திரில்லர் தொடரான 'ராணா நாயுடு' தொடர் வரும் 10-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் தொடரில் வெங்கடேஷின் மகனாக ராணா நடித்துள்ளார் என்பது டிரைலர் மூலம் தெரிகிறது. ஹேட் ஸ்டோரி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சுர்வீன் சாவ்லா இதில் நாயகியாக நடித்துள்ளார்.