டெடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்கனர் சக்தி சவுந்தர் ராஜனும் கேப்டன் என்ற படத்தில் இணைந்துள்ளனர். ஆக்சன் த்ரில்லர் ஜேனரில் உருவாக்கப்பட்டுள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கேப்டன் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆர்யாவுடன் சிம்ரன், ஐஷ்வர்ய லட்சுமி, ஹரிஷ் உத்தமன், தவுபிக் ஷெர்ஷா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 8 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
டைம் டிராவல், தாய்ப்பாசம், அறிவியல் ஆகிய மூன்று அம்சங்களும் கலந்து ஒரு படம்'கணம்'. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கியுள்ள கணம் திரைப்படம் நாளை 9-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா, அலியாபட் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரம். இந்திய வரலாற்றின் நவீன வடிவமாக அட்வெஞ்சர் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்தை நாளை செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடுகின்றனர்.
அறிமுக நடிகர் விஷ்வா ஸ்ரீதரன் மற்றும் சாய் தன்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாட் ரீச்சபிள் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு முருகானந்தம் எழுதி இயக்கியுள்ளார். க்ராக்பெயின் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இத்திரைப்படம் நாளை செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் விஜயன், சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா மற்றும் சாய் ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரண் குமாரின் இசையும், சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.