பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குனரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இன்று அவருக்கு 70 வது பிறந்தநாள். 1979 இல் பாக்யராஜ் இயக்குனர் ஆனபோது இன்றைவிடவும் சென்டிமெண்டில் தமிழ் சினிமா மூழ்கிக் கிடந்தது. படத்தின் பெயரிலிருந்து, முதல்காட்சிவரை அனைத்தும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், பாக்யராஜ் தனது முதல் படத்துக்கு சுவரில்லாத சித்திரங்கள் என பெயர் வைத்தார். அந்தகாலகட்ட நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை, வேலையின்மையின் நெருக்கடியை படம் கலாபூர்வமாக சொன்னது. 1979 நவம்பர் 30 வெளியான படம், படத்தின் சோகக்காட்சிகளைத்தாண்டி வெற்றி பெற்றது.
முதல் படம் தந்த வெற்றியின் காரணமாக இரண்டாவது படத்திற்கு அதிக அழுத்தம் இருந்தது. பாக்யராஜின் பிளஸ் பாயின்ட் அவரது வசனங்களும், அதை அவர் சொல்கிற முறையும். இரண்டாவது படத்தில் இந்த இரண்டும் இல்லாமல் பேச்சு வராதவராக நடித்தார். படத்தின் பெயர் ஒரு கை ஓசை. நெகடிவ் பெயர். பலரும் இது பரிசோதனை முயற்சி என காலைப்பிடித்து கீழறக்க முயன்றும் துணிந்து ஒரு கை ஓசையை எடுத்தார். அவர் சொன்னது போலவே வசனம் இல்லாமலே நகைச்சுவையை வெளிப்படுத்தி, படத்தை வெற்றிப் படமாக்கினார். ஒரு கை ஓசை 1980 ஜுலை 25 வெளியானது.
இதையடுத்து இன்று போய் நாளை வா படத்தை இயக்கி நடித்தார். அக்மார்க் பாக்யராஜ் படம். புதிதாக குடிவரும் இளம் பெண்ணை மூன்று இளைஞர்கள் சவால்விட்டு காதலிப்பது கதை. மூன்று பேரும் அந்தப் பெண்ணை நெருங்க எடுத்துக் கொள்ளும் முயற்சியும், கடைசியில் யார் அந்தப் பெண்ணின் மனதை கவர்கிறார் என்பதும்தான் கதை. திரைக்கதை வசனத்தில் பாக்யராஜ் பின்னியிருப்பார். 1981 மார்ச் 27 வெளியான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஐந்தாவதாக விடியும்வரை காத்திரு படத்தை பாக்யராஜ் இயக்கி, நடித்தார். சத்யகலா நாயகியாக நடித்த இந்தப் படம் 1981 மே 8 ஆம் தேதி திரைக்கு வந்தது. சொத்துக்காக சொந்த மனைவியையே கொல்லத் துணியும் நெகடிவ் வேடத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார். போலீசின் கண்களில் மண்ணைத் தூவி அவர் தனது கொலை திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை பரபரப்பாக சொல்லியிருந்தனர். படம் 100 நாள்கள் ஓடியது.
படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்த பாக்யராஜ், தனது ஆறாவது படம் அந்த 7 நாள்களில் ஏழை மலையாள இசையமைப்பாளர் வேடத்தில் நடித்தார். அம்பிகா ஜோடி. 'என்ற காதலி உங்க பொண்டாட்டி ஆகலாம், ஆனா, உங்க பொண்டாட்டி என்ற காதலியாக முடியாது' என்ற படத்தின் கிளைமாக்ஸ் வசனம் தாய்க்குலங்களை சென்டிமெண்டில் கரைய வைத்து 175 நாள்கள் ஓட வைத்தது. அந்த 7 நாள்கள் நகரத்து கதையென்றால் அடுத்தப் படத்தை அப்படியே கிராமத்துப் பின்னணியில் எடுத்தார். தூறல் நின்னு போச்சு என கவித்துவமான பெயரில் தயாரான படத்தில் சுலேச்சனா அப்பாவி இளம் பெண்ணாக வந்து மனதை கவர்ந்தார். நம்பியாரின் கதாபாத்திரம் படத்துக்கு கம்பீரத்தை கொடுத்தது. படம் அதிரி புதிரி வெற்றியானது.
ஒரு இயக்குனர் தனது அறிமுகப் படத்திலிருந்து தொடர்ந்து 7 படங்கள் வெற்றிப் படங்களாக அளிப்பது அரிது. அதிலும் இயக்கத்துடன் பிரதான வேடத்தில் பாக்யராஜ் நடிக்கவும் செய்தார். இந்த 7 படங்களுக்குப் பிறகு அவர் எடுத்த பொய் சாட்சி திரைப்படம் தோல்விப் படமாகி அவரது தொடர் வெற்றிக்கு ஸ்பீடு பிரேக்கர் போட்டது. பொய் சாட்சிக்குப் பிறகு டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, சின்ன வீடு என்று பாக்யராஜ் தனது முத்திரைகளைப் பதித்தார். வணிக வெற்றிக்கு உத்தரவாதமுள்ள திரைக்கதையை அவரளவுக்கு சிறப்பாக எழுதிய திரைக்கதையாசிரியர்கள் குறைவு என்பதுதான் பாக்யராஜ் அவர்களின் தனித்துவம். இன்று பிறந்த நாள் காணும் திரைக்கதை மன்னனுக்கு நமது வாழ்த்துகள்.