1961 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி அரசிளங்குமாரி வெளியானது. அதாவது அரசிளங்குமரி வெளியாகி இன்று 62 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அரசிளங்குமரியில் எம்ஜிஆரும், பத்மினியும் அண்ணன், தங்கைகள். படைத்தளபதியான நம்பியார், தானொரு சாமானியன் என்று சொல்லி பத்மினியை திருமணம் செய்வார். முதலில் நல்லவராக தெரியும் அவர் போகப் போக தனது சுயரூபத்தை வெளிப்படுத்துவார்.
சண்டைக் காட்சிகளும், காதல் காட்சிகளும் கொண்ட படம். இறுதியில் எம்ஜிகும் நம்பியாருக்கும் நடக்கும் வாள் சண்டை அப்போது ரசிகர்களிடையே பிரபலம். பத்மினிக்கு துடிப்பான காதலியாக வந்து, துன்பப்படும் மனைவியாக கண்ணீர்விடும் கதாபாத்திரம். கணவன் தன்னை கொலை செய்ய முயன்றும், அண்ணனிடமிருந்து அவனை காப்பாற்ற துடிக்கும் கண்ணகி. நம்பியார் நல்லவன், கெட்டவன் என இருவித நடிப்பில் ஜமாய்த்திருப்பார். இறுதியில் மச்சானுக்கு வைக்கும் குறி சொந்த தந்தையின் மார்பில் பாய, அவரது மொத்த தீயக் குணங்களும் மாறும்.
ஜி.ராமநான் இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 5 பாடல்கள் எழுதினார். அதில் ஒன்று, சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா... - சமூகக் கருத்துக்களை எளிமையான வரிகளில் சொன்ன பட்டுக்கோட்டையின் அருமையான பாடல். கண்ணதாசன், கு.ம.பாலசுப்பிரமணியம், ஆர்.பழனிச்சாமி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், உடுமலை நாராயண கவி ஆகியோர் தலா ஒரு பாடல் எழுதினர்.
அரசிளங்குமரியை பழம் பெரும் நிறுவனமான ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்தது. எம்ஜிஆருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்த ராஜகுமாரி, அண்ணாவின் வேலைக்காரி, கருணாநிதியின் அபிமன்யூ, சிவாஜி நடிப்பில் கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா, எம்ஜிஆரை ஸ்டாராக நிலைநிறுத்திய மர்ம்யோகி உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த நிறுவனம் இது. இதனை உருவாக்கிய ஜுபிடர் சோமு என்கிற எஸ்.சோமசுந்தரம் அரசிளங்குமரி தயாரிப்பில் இருக்கையில் நோயில் விழுந்தார். படம் வெளியாவதற்கு முன்பு அவரது மரணம் சம்பவித்தது. தந்தையின் மரணத்தை தாங்க முடியாத அவரது மகள் சாந்தாவும் தந்தை இறந்த சில மணி நேரங்களில் உயிர் துறந்தார்.
அரசிளங்குமரியை, ஜுபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான இயக்குனரான ஏஎஸ்ஏ சாமி இயக்கினார். படப்பிடிப்பில் அவருக்கு மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, படத்திலிருந்து விலகிக்கொள்ள, ஏ.காசிலிங்கம் மீதிப் பகுதிகளை இயக்கினார். 1921 இல் ரஃபேல் செபாஸ்டினி என்ற இத்தாலி - பிரிட்டீஷ் எழுத்தாளர் எழுதிய Scaramouche நாவலை தழுவி அதே பெயரில் 1952 இல் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதனை தழுவி எழுதப்பட்டது அரசிளங்குமரி படத்தின் கதை.
அனைத்துப் பொழுதுப்போக்கு அம்சங்களும் நிறைந்த அரசிளங்குமரி வெளியான காலத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.