விவசாயி, விவசாயப் பிரச்சனைகள் ஆகியன இன்றைய சினிமாவுக்கான பாக்ஸ் ஆபிஸ் கச்சாப்பொருள்கள். இயற்கை விவசாயம், விவசாயி என்று வாயால் பேசியே அரசியல் கட்சி நடத்தப்படுகிற காலத்தில், விவசாயத்தை தனது கச்சாப் பொருளாக தமிழ் சினிமா ஆக்கிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. 54 வருடங்களுக்கு முன்பே விவசாயம், விவசாயி, விவசாய நிலத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் தொழிற்சாலை முதலாளிகள் குறித்து தமிழில் ஒரு படம் வெளிவந்தது.
சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர், 1960-ன் இறுதியில் விவசாயப் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு கதையை தயார் செய்தார். மையம் மட்டும்தான் இந்தக் கதை. அதைச்சுற்றி ஆறுவேலிக்கு ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என்று வேலியைப் போட்டு பிரமாண்டம் காட்டியிருந்தார். அவரது கதைக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார்.
படத்தின் கதைப்படி கிராமத்து வேலு ஒரு விவசாயி. தனது ஊரைத் தவிர அடுத்த ஊருக்குச் செல்லவே மனமில்லாதவன், அந்தளவு கட்டுப்பெட்டி. அவனது தங்கை மீனா. அதே ஊரில் உள்ள வள்ளியும், வேலுவும் காதலர்கள். வேலுவின் உற்ற நண்பன் ராஜா. பணக்கார். வெளிநாட்டில் படித்துவிட்டு வரும் ராஜாவை அவன் இவன் என்று நட்போடு அழைப்பதா, சின்ன முதலாளி என்று மரியாதையுடன் அழைப்பதா என்று வேலுவுக்கு தயக்கம். நான் எப்போதும் உன் தோழன்தான் என்று நட்புக்கரம் நீட்டும் நல்லவன் ராஜா.
வேலு மீது திட்டமிட்டு திருட்டுப் பட்டம் கட்டப்படுகிறது. தனது நிலத்தை அள்பளிப்பாக நண்பனுக்கு எழுதி வைத்து ஊரைவிட்டு கிளம்புகையில், ராஜாவின் பஞ்சு குடோனுக்கு தீயிட்டு அதில் வேலுவையும், அவன் தங்கையையும் பொசுக்கப் பார்க்கிறான் வாசுதேவன். ராஜாவும் அனைத்திற்கும் காரணம் வேலு என்று நினைக்கிறான். இறுதியில் உண்மை தெரியவர வேலுவும், ராஜாவும் ஒன்றிணைவதுடன் சுபம்.
கதையைப் படிக்கையில் விவசாயம், விவசாய நிலம் என்பது வெறும் மையம் மட்டும் என்பது புரிந்திருக்கும். வேலுவாக சிவாஜியும், வள்ளியாக சரோஜாதேவியும், ராஜாவாக ஜெய்சங்கரும், தங்கை மீனாவாக விஜயநிர்மலாவும் நடித்திருந்தனர். சரோஜாதேவியின் அண்ணனாக நாகேஷ். படத்தின் ஆரம்பத்தில் வரும் ரேக்ளா காட்சி, படத்திற்கு சரியான அறிமுகக் காட்சியாக அமைந்தது. வாசுதேவனாக வரும் நம்பியாரை வசனம் பேசிக் கொண்டே சிவாஜி அடிக்கிற இடம் சுவாரஸியம். நட்போ, பாசமோ... கதறிவிடுவார் சிவாஜி. இதிலும் அப்படியே.