35 எம்எம்-மில் திரைப்படங்களைப் பார்த்து வந்த மக்களுக்கு சினிமாஸ்கோப் என்பது ஆச்சரியமான அதிசயமாக அன்று இருந்தது. முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் என்ற வாசகம் ராஜராஜ சோழன் படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் இடம்பெற்றது. சிவாஜி கணேசன் இந்தப் படத்திற்கு முன்பே திருவிளையாடல், கந்தன் கருணை, திருவருட்செல்வர், ஹரிச்சந்திரா போன்ற புராண படங்களில் நடித்து, அதுவரை கற்பனையில் கண்டு வந்த புராண புருஷர்களுக்கு உருவம் கொடுத்திருந்தார்.
ராஜராஜ சோழன் என்றால் போரும், சண்டையும் கலந்த வீர வரலாற்று சித்திரமே மனதில் தோன்றும். படத்தில் போர்க்காட்சியையும், வாள் சண்டைகளையும் ரசிகர்கள் எதிர்பார்த்தது இயல்பு. இந்த இரண்டுமே படத்தில் தொட்டுக்கொள்ளும் அளவுக்கே இருந்தது. ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். அதேநேரம் தஞ்சைப் பெரிய கோவில் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆரம்ப காட்சிகளும், அழகு தமிழ் வசனங்களும், சிவாஜி அவரது மனைவியாக நடித்த விஜயகுமாரி, முத்துராமன், ஆர்.எஸ்.மனோகர், டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.நம்பியார், சிவகுமார் போன்றவர்களின் நடிப்பும், ஆர்ப்பாட்டமான ஆடை, ஆபரணங்களும், பிரமாண்டமான கலை இயக்கமும் ரசிகர்களுக்கு சோர்வு எழாமல் பார்க்க வைத்தன.
ராஜராஜ சோழன் நாடகத்தை முதலில் டிகேஎஸ் நாடக சபா 1955-ல் அரங்கேற்றியது. அரு.ராமநாதன் நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் இரண்டாயிரம் முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டது. ராஜராஜ சோழன் கதையை திரைப்படமாக்க பலரும் முயன்றனர். 18 வது நபராக ஜி.உமாபதி அந்த முயற்சிக்கு செயல்வடிவம் கொண்டு வந்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் தயாரானது.
முதல் சினிமாஸ்கோப் என்பதால் படத்தின் ஒளிப்பதிவாளர் டபுள்யூ ஆர்.சுப்பாராவ் மும்பை சென்று அதற்குரிய கருவிகளை வாங்கி வந்து பயிற்சி எடுத்து படமாக்கினார். குன்னக்குடி வைத்தியநான் இசையமைக்க கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். படத்தின் திரைக்கதையை தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய வரலாற்றையொட்டி அமைத்தனர். ஆனால், கோவிலின் உள்ளே படமாக்க மத்திய தொல்லியல்துறை அனுமதி தராததால், கோவிலின் பல பகுதிகளை சென்னையில் அரங்கம் அமைத்து எடுத்தனர். போர்க் காட்சிகள் இல்லாதது படத்தின் பலவீனமாக அமைந்தது.
திரைக்கதை சொதப்பியதால் படம் சுமாராகவே போனது. கூடவே அந்த காலகட்டத்தில் தமிழகம் மின்பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. பல மணிநேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. பெரும்பாலான திரையரங்குகளில் ஜெனரேட்டர் வசதி இல்லை. இவையெல்லாம் படத்தின் வசூலை பாதித்தன. மின்சாரவெட்டு இருந்தும் இரண்டே வாரங்களில் சுமார் 25 லட்ச ரூபாய் வசூல், இது தமிழ்ப் பட உலகின் மாபெரும் சாதனை என்று பத்திரிகைகளில் விளம்பரம் அளித்தனர்.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற பிற வீர வரலாற்று நாயகர்களைப் பற்றிய படங்களுடன் ஒப்பிடுகையில் முழுத்திருப்தி தராத திரைப்படம் ராஜராஜ சோழன். சிவாஜி என்ற நடிகனையும், அவரது நடிப்பையும் எடுத்துவிட்டால் அது ஒரு சாதாரண திரைப்படம். ராஜராஜ சோழனின் முழு ஆளுமையை வெளிக்கொணர்வது போல் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அது பாகுபலியைவிட பிரமாண்டமாகவும், உண்மையான வரலாறாகவும் இருக்கும்.