ஆனால், வாய்ப்பு இந்த இரண்டாவது சிவகுமாருக்கு கிடைக்கவில்லை. முதல் சிவகுமாருக்குதான் கிடைத்தது. கலைஞர் சிவகுமார் என்றுதான் சொன்னார், எந்த சிவகுமார் என்று சொல்லவில்லை. இந்த பெயர் குழப்பத்திற்குப் பிறகு இரண்டாவது சிவகுமார் தனது பெயரை விஜயகுமார் என்று மாற்றிக் கொண்டார். ஆமாம், நாட்டாமை விஜயகுமார்தான் அவர்.
குமாரி ருக்மணியின் தாய் ஜானகியும் நடிகைதான். பூர்வீகம் தஞ்சாவூர். ருக்மணியின் சின்ன வயதிலேயே அவர்கள் சென்னைக்கு குடியேறியிருந்தனர். ஹரிச்சந்திரா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் - அப்போதைய பாம்பேயில் நடந்து கொண்டிருந்த நேரம். பால்யகால லோகிதாசனாக நடிக்க சரியான குழந்தை நட்சத்திரம் அமையவில்லை. இந்நேரம், படத்தின் நாயகி டி.பி.ராஜலக்ஷ்மி தனது அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த சுட்டிக்குழந்தையை பார்க்கிறார்.
பிறகு சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம், ரிஷ்யசிருங்கர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின் ஏவிஎம்மின் ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். 1946 இல் ஒய்.வி.ராவ் தயாரித்து, இயக்கி, நடித்த படத்தில் ருக்மணி அவரது ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகும் ருக்மணி தொடர்ந்து நடித்தார். 1955 இல் வெளிவந்த முல்லைவனம் திரைப்படம்தான் அவர் நாயகியாக நடித்த கடைசிப்படம். அதன் பிறகு 1961 இல் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்தார். பி.மாதவன் இயக்குநராக அறிமுகமான மணி ஓசை, ஜெமினி கணேசனின் இதயத்தில் நீ, எம்.ஆர்.ராதா, கல்யாண் குமார் நடித்த கடவுளைக் கண்டேன், சிவாஜியின் பார் மகளே பார், கலைஞரின் பூம்புகார், கர்ணன், நவராத்திரி, இதய கமலம், விளையாட்டு பிள்ளை உள்பட ஏராளமான படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தார்.
எம்ஜிஆரின் தலைவன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மணிவண்ணனின் அம்மாவாக சின்ன வேடத்தில் தோன்றியிருப்பார். ருக்மணி, ஒய்.வி.ராவின் மகள்தான் பிரபல நடிகை லட்சுமி. அம்மாவைவிட சினிமாவில் பேரும் புகழும் மகளுக்கு கிடைத்தன. சவாலான வேடங்களில் நடித்தார். அவரது பாட்டி ஜானகியும் ஒரு நடிகை.
அந்த வகையில் லட்சுமி அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகை. லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவும் நடிகை. அவர் நான்காவது தலைமுறை. அம்மா லட்சுமி, பாட்டி ருக்மணியின் அர்ப்பணிப்பு ஐஸ்வர்யாவிடம் இருந்திருந்தால் இன்னும் மேம்பட்ட நடிகையாக அறியப்பட்டிருப்பார். நான்கு தலைமுறை கலைக்குடும்பம், ஐஸ்வர்யாவுக்குப் பிறகு கலையுலகில் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.