கமல் - போட்டி எழுபதுகளின் இறுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்து வருகிறது. ரஜினி கமர்ஷியல் படங்களில் தொடர்ச்சியாக நடித்து, தன்னை வசூல் சக்ரவர்த்தியாகவும், சூப்பர் ஸ்டாராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். கமர்ஷியல் படங்களுடன் பரிசோதனை முயற்சிகள் செய்து மாஸ் மற்றும் கிளாஸ் படங்களின் நாயகனாக கமல் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இவர்களின் படங்கள் ஒரேநாளில் வெளியாகும் போது ரசிகர்களின் போட்டியால் திரையரங்குகள் தீப்பிடிக்கும்.
1985 இல் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11 கமல் நடித்த காக்கி சட்டை திரைப்படம் வெளியானது. போலீஸ் அதிகாரியாவதை தனது கனவாகக் கொண்டு, அதற்காக முயற்சி செய்துவரும் இளைஞனாக கமல் நடித்தார். அவரது ஜோடி அம்பிகா. சட்டையில்லாமல் உடற்பயிற்சி செய்யும் கமலை அம்பிகா 'சைட்' அடிப்பது இளமை ததும்பும் காட்சிகள். இளையராஜா அசத்தலான பாடல்களை காக்கி சட்டை படத்துக்குப் போட்டிருந்தார். கமலும், அம்பிகாவும் நடனத்தில் அசத்தியிருந்தனர். வில்லனாக நடித்த சத்யராஜ் தகடு தகடு என்று வசனம் பேசி கைத்தட்டல்களை அள்ளினார்.
காக்கி சட்டை படத்தில் நடித்த அதே நாயகி, அதே வில்லன் ரஜினியின் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்தனர். அதே இளையராஜா இசை. கூடுதலாக பாக்யராஜும் உண்டு. நான் சிகப்பு மனிதனின் கதை ஆஜ் கி அவாஸ் இந்திப் படத்தைத் தழுவி எழுதப்பட்டது. கிரிமினல்களால் தங்கையையும், குடும்பத்தையும் இழந்த பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்தார்.
இதில் இன்னொரு சுவாரஸியம், அன்று பாக்யராஜே ஒரு பெரிய ஹீரோதான். அவர் நான் சிகப்பு மனிதனில் நடிக்க, அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் இருவரும் காக்கி சட்டை படத்தின் திரைக்கதையில் பணியாற்றினர். குருவின் படத்தை சிஷ்யர்கள் வேலை செய்த படம் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்தது.