சரியாக வருடங்களுக்கு முன், 1986 டிசம்பர் 12 ஆம் தேதி இதே நாளில் சிவாஜி நடித்த மண்ணுக்குள் வைரம் திரைப்படம் வெளியானது. இயக்குனர் பாரதிராஜாவின் மைத்துனரும், பிற்காலத்தில் சாமுண்டி, குருபார்வை போன்ற படங்களை இயக்கியவருமான மனோஜ் குமார் படத்தை இயக்கினார். அவரது முதல் படம் இது. இந்தப் படத்தில்தான் வாணி விஸ்வநாத் அறிமுகமானார்.
வாணி விஸ்வநாத் என்ற பெயரைப் பார்த்து, அவர் நடிகர் விஸ்வநாதனின் மகள் என்று பலரும் நினைத்தனர். சில பத்திரிகைகள் அப்படி எழுதவும் செய்தன. இன்றும் அந்தப் பிழை தொடர்கிறது. ஆனால், வாணி விஸ்வநாத்தின் தந்தை மலையாளி. பிரபல ஜோதிடர். தனது மகள் சினிமா, அரசியல் இரண்டிலும் ஜொலிப்பார் என வாணி விஸ்வநாத்தின் 13 வது வயதிலேயே கணித்திருக்கிறார். அந்த கணிப்பு, வாணி விஸ்வநாத்தின் 15 வது வயதில் நிறைவேறியது. மண்ணுக்குள் வைரம் படத்தில் அறிமுகமானார். அடுத்த வருடமே மாங்கல்ய சார்த்து என்ற மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சித்திக் - லாலின் மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங் திரைப்படம் வாணி விஸ்வநாத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயினாக நடித்தவர், தனது மிடுக்கான தோற்றம் காரணமாக அதிரடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக போலீஸ் கதாபாத்திரங்கள். பல நாயகி மையப் படங்கள் அவரது போலீஸ் நடிப்பில் வெளியானது. மம்முட்டி, மோகன்லால் படங்களில், அவர்களுக்குப் போட்டியாக முரண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பலமுறை நடித்துள்ளார். அதில் மோகன்லாலின் உஸ்தாத், மம்முட்டியின் ட்ரூத் திரைப்படங்கள் முக்கியமானவை.
2002 இல் வாணி விஸ்வநாத் சக நடிகரும், தயாரிப்பாளருமான பாபுராஜை திருமணம் செய்து கொண்டார். இவர் துணை நடிகராக சினிமாவில் நுழைந்து, வில்லனின் அடியாளாக உயர்ந்து, வில்லனாக புரமோஷன் பெற்று, சில படங்களை தயாரிக்கவும் செய்திருந்தார். முதல் மனைவியின் மூலம் இரண்டு மகன்கள் இருந்த நிலையில், 2002 இல் இரண்டாவதாக வாணி விஸ்வநாத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
பாபுராஜுக்கு ஜிம் பாடி. வில்லத்தனத்துக்குப் பொருத்தமானது. அவரை தனது சால்ட் அண்ட் பெப்பரில் நகைச்சுவை வேடத்தில் ஆஷிக் அபு நடிக்க வைத்தார். அது வித்தியாசமாகவும், பாபிராஜின் இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக அதுபோன்ற நகைச்சுவை வேடங்களில் நடித்தார். நாட்டி புரபஸர் போன்ற படங்களில் நாயகனாகவும் தோன்றினார். தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் ஸ்கெட்ச், விஷாலின் வீரமே வாகை சூடும் படங்களிலும் நடித்துள்ளார். வாணி விஸ்வநாத் தற்போது நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார்.