பாண்டியராஜன் எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்த நெத்தி அடி படம் வெளிவந்து இன்றோடு 33 வருடங்கள் நிவைடைகிறது. பாண்டியராஜன் இயக்கிய முதல் படம் கன்னிராசி 1985-ல் வெளியானது. அதே வருடம் அவர் இயக்கி, ஹீரோவாக நடித்த ஆண்பாவம் வெளியாகி ஒரு வருடம் ஓடியது. அதையடுத்து மனைவி ரெடி படத்தை இயக்கி, நடித்தார். நான்காவதாக வெளிவந்த படம்தான் நெத்தி அடி.
பாண்டியராஜன் படம் என்றால் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. நெத்தி அடியின் கிளாசிக் காமெடிகள் இன்றும் பிரபலம். இதில் பாண்டியராஜனின் தந்தை மைசூர் மாணிக்கம் என்ற சமையல்காரர் வேடத்தில் ஜனகராஜ் நடித்திருப்பார். சாராயம் குடிக்கையில் கை நடுங்கும். கிளாசில் இருக்கும் சாராயத்தை எடுத்து உதட்டருகே கொண்டு போவதற்குள் கை நடுக்கத்தில் மொத்த சாராயமும் கொட்டிவிடும். கையை டவலால் கட்டி, ஏற்றம் இறைப்பது போல் சமாளிக்கிற காட்சியில் தியேட்டரே அல்லோகலப்படும்.
பாட்டி இறந்ததுக்கு பாண்டியராஜனை சாவு சொல்லி அனுப்புகிற காட்சிதான் நெத்தி அடியின் ஹைலைட். சாவு சொல்ல போகாமல் பாண்டியராஜன் தியேட்டர் தியேட்டராக படம் பார்த்து, காரியம் முடிந்த பிறகே வீடு திரும்புவார். இதனிடையில் அவர் சாவு சொல்ல வேண்டிய கோண சித்தப்பா எதேச்சையாக ஊருக்கு வந்து சாவில் கலந்து கொள்வார்.
வீட்டிற்கு வரும் பாண்டியராஜனை ஜனகராஜ் இப்போது டீல் பண்ண வேண்டும். "யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். அவனே சொல்வான். வேணு (பாண்டியராஜன் பெயர்) சொல்லு..." "பாட்டியை கண்ணுல காட்டாம காரியம் பண்ணிட்டீங்களே..." பாண்டியராஜன் அழ, "வேணு... இந்த கதையெல்லாம் வேணாம். இன்னும் நிறைய பாட்டிங்க இருக்காங்க. எல்லாம் சாகத்தான் போறாங்க. அப்போ அழுதுக்கலாம்.
சாவு சொல்லப் போனியே சொன்னியா..." "கோண சித்தப்பா கிட்ட சொன்னனே..." "அதுக்கு கோண என்ன சொன்னான்...?" "அவர் எங்க சொல்ற நிலைமையில இருந்தார். ஒருபக்கம் இழுத்துகிட்டு, அவரால பேசவே முடியலை..." "இப்போ பேசுவாம் பாரு... கோண..." வீட்டிற்குள் பார்த்து கூப்பிட, கோண சித்தப்பா நொண்டிக் கொண்டே வருவார். எப்போது பார்த்தாலும் அலுக்காத நகைச்சுவை.
அடுத்த நாள் வைஷ்ணவி வருகையில் பாண்டியராஜன் குளித்துக் கொண்டிருப்பார். வைஷ்ணவி பார்த்து அதிர்ச்சியாவார். பாண்டியராஜன், "பதிலுக்குப் பதில் சரியாப் போச்சு" என்பார். நெத்தி அடி வெளியான அதே வருடம் வெளியான பாசிலின் வருஷம் 16 படத்திலும் இதுபோல் ஒரு காட்சி இருக்கும். வி.கே.ராமசாமி கொஞ்சம் விரசமாகவே அதில் வசனம் பேசியிருப்பார். அதற்குப் பிறகு நாயகி பாத்ரூமில் குளிப்பதும், நாயகன் அதை பார்ப்பதும், அவர்களுக்குள் காதல் வருவதும் தமிழ் சினிமாவில் ஒரு ஃபார்முலாவாகவே ஆகிப்போனது. ரஜினியின் அண்ணாமலையிலும் இப்படியொரு காட்சி உண்டு. குஷ்பு குளிப்பதைப் பார்த்துவிட்டு ரஜினி கடவுளே கடவுளே என புலம்பிக் கொண்டிருப்பார்.