சிறிய வயதில் இருந்தே மாடலிங் துறையில் சாதிக்க ஆர்வம் கொண்டிருந்த அஜித், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குடும்ப நண்பர். அப்போது, எஸ்.பி.பி சரணுடன் ஒன்றாக பள்ளி படிப்பை பயின்ற அஜித், சரணின் ஆடையை அணிந்து கொண்டு மாடலிங்கில் பங்கேற்கும் அளவுக்கு, இருவரும் நட்புடன் இருந்ததாக எஸ்.பி.பி பலமுறை நினைவுகூர்ந்துள்ளார்.
அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து 12 ஆண்டுகள் ஆனாலும், அவர் மீதான அபிமானம் மட்டும் அவரது ரசிகர்களுக்கு குறையவில்லை. தன் பெயரை அரசியலில் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகவே மன்றங்களை கலைத்த அஜித், அரசியலில் தொடர்பற்றவராக இருந்தாலும், தமிழ்நாடு அரசியலை உன்னிப்பாக கவனிப்பதாக அவருடன் நெருங்கி பழகுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
கார் பந்தயங்களின் போது விபத்துக்குள்ளாகி முதுகு தண்டுவடத்தில் L4, L5 ஆகிய 2 டிஸ்க்குகளை இழக்கும் அளவிற்கு பாதிக்கப்பட்டாலும் நம்பிக்கையை இழக்காதவர். செயற்கை டிஸ்க்குகள் பொருத்தியிருந்தாலும் ஆபத்தான சண்டை காட்சிகளிலும், நடன காட்சியிலும் அவர் அசத்துவது திரையுலகினரை மட்டுமல்ல அனைவரையுமே வியக்க வைக்கும் ஒன்றுதான்.