மேன் ஆன் ஃபயர் 1980-ல் எழுதப்பட்ட ஆங்கில நாவல். குழந்தைக் கடத்தலை பின்னணியாகக் கொண்டது. இதனை தழுவி ஆங்கிலத்தில் இதே பெயரில் 1987 இல் ஒரு படம் வெளியானது. இதையடுத்து, இதே நாவலை தழுவி மீண்டும் 2004 இல் அதே, மேன் ஆன் ஃபயர் பெயரில் ஒரு படத்தை ஹாலிவுட்டில் எடுத்து வெளியிட்டனர். டோனி ஸ்காட் படத்தை இயக்க, டென்சல் வாஷிங்டன் நடித்திருந்தார். தி பார்ன் சீரிஸில் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரைமொழிக்கு முன்னோடியாக இந்தப் படம் அமைந்தது.
கதைப்படி டென்சல் வாஷிங்டன் சிஐஏ அதிகாரி. கொலை செய்வதற்கென பயிற்றுவிக்கப்பட்டவர். வேலையிலிருந்து விலகி வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் மெக்சிகோவில் இருக்கும் தனது நண்பனை பார்க்க வருவார். இவரது நிலையை கண்டு, ஒரு வேலையில் சோந்தால் வாழ்க்கையில் பிடிப்பு வரும் என பாடிகாட் வேலை ஒன்றை வாங்கித் தருவார் நண்பர். பெரும் மில்லியனர் தம்பதியின் ஒரே மகள் சிறுமி பீட்டாவை கவனித்துக் கொள்ள வேண்டும். பேபி சிட்டிங் அல்ல, பாடிகாட் வேலை. மெக்சிகோதான் உலகில் அதிகம் ஆள் கடத்தல் நடக்கும் நகரம். ஆள்களை கடத்தி பணம் பறிப்பதை ஒரு தொழிலாகவே அங்கு செய்து வருகிறார்கள். பீட்டாவையும் அப்படியொரு கும்பல் குறி வைத்துள்ளது. பீட்டாவுக்கு பாடிகாட் போடும் போதெல்லாம், பீட்டாவின் பெற்றோர் தருவதைவிட அதிகம் பணம் தந்து பாடிகாட்களை வேலையிலிருந்து நிற்க வைத்துவிடுவார்கள். இப்படியொரு சூழலில்தான் பீட்டாவை பாதுகாக்கும் பொறுப்பை டென்சல் வாஷிங்டன் ஏற்றுக் கொள்கிறார். குடி, தற்கொலை எண்ணம் என்று இருக்கும் டென்சலால் பீட்டாவுடன் ஒட்ட முடியவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் நெருக்கமாகிறார்கள். நீச்சலில் எப்படி வெற்றி பெறுவது என டென்சல் அவளுக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த நேரத்தில் ஒரு கும்பல் டென்சலை சுட்டுவிட்டு பீட்டாவை கடத்துகிறது. பணம் கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியில் பீட்டாவையும் அந்த கும்பல் கொன்று விடுகிறது.
காயத்திலிருந்து மீண்டெழும் டென்சல் வாஷிங்டன் பீட்டாவை கடத்தியவர்களை ஒவ்வொருவராக கண்டறிந்து கொலை செய்வார். லோக்கல் போலீசார் அதில் பங்கு வகித்திருப்பார்கள். ஒரு ட்ரெய்ன்டு கில்லர் பழி வாங்கக் கிளம்பினால் என்னாகும் என்பதை டோனி ஸ்காட்டும், டென்சல் வாஷிங்டன்னும் படத்தில் காட்டியிருப்பார்கள். ஒருவரை கொலை செய்ய, வயதான தம்பதியின் வீட்டில் டென்சல் பதுங்கியிருப்பார். அவர்களை மன்னிக்கலாமே என்பார் வீட்டுப் பெரியவர். மன்னிக்கிறது கடவுளோட வேலை. அவருக்கும், இவங்களுக்கும் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது மட்டும்தான் என் வேலை என்று, திட்டமிட்டபடி அந்த நபரை கொலை செய்வார்.
அதேபோல் டென்சல் வேட்டையை ஆரம்பித்த பின் கொலைகளாக விழும். போலீசுக்கு தலைவலியாகும். மெக்சிகோவில் உள்ள டென்சலின் நண்பரை கூப்பிட்டு கேட்பார்கள். அவர், மரணம்தான் டென்சிலின் கலை. அவர் தனது மாஸ்டர் பீஸை இப்போது வரைந்து கொண்டிருக்கிறார் என்பார். வசனம், காட்சிகள், திரைமொழி என அனைத்தும் மேன் ஆன் ஃபயரில் சிறப்பாக இருக்கும். கூடவே டென்சலின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு. படம் உலக அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை தழுவி ஆணை என்ற படத்தை தமிழில் எடுத்தனர். அர்ஜுன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். 9 பேரை போட்டுத் தள்ளியவர். டிபார்ட்மெண்ட் இவரை சஸ்பெண்ட் செய்ய, வேலையில்லாமல் இருப்பார். அவருக்கு இதேபோல் ஒரு குழந்தையை பாதுக்காக்கும் பொறுப்பு வரும். டென்சிலைப் போலவே அவரையும் தாக்கிவிட்டு குழந்தையை கடத்துவார்கள். எப்படி அர்ஜுன் அவர்களை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை. அப்படியே அடித்தார்கள். அடித்தது இயக்குனர் செல்வா. ஹாலிவுட் படத்தில் இல்லாத காதல், டூயட், இரண்டு நாயகிகள், வடிவேலு காமெடி என்று கதையை பலாத்காரம் செய்து வைத்திருந்தனர். படம் 2005 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியனது. டிசம்பர் 9 ஆம் தேதி மேன் ஆன் ஃபயர் படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி எடுத்த இந்திப் படம் ஏக் ஆஜ்நபி வெளியானது. அமிதாப்பச்சன் நடித்திருந்தார். அப்போது இந்த பான் - இந்தியா எல்லாம் இல்லை. இருந்திருந்தால் நாங்க முறைப்படி காசு கொடுத்து வாங்குன கதையை எப்படி தமிழில் காசே கொடுக்காம காப்பி அடிக்கலாம் என்று கேட்டிருப்பார்கள்.
மேன் ஆன் ஃபயரை இயக்கிய டோனி ஸ்காட் பிரபல இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் தம்பி, டாப் கன், பிவெர்ல்லி ஹில்ஸ் காப், கிர்ம்சன் டைட், எனிமி ஆஃப் தி ஸ்டேட்ஸ், ஸ்பை கேம் போன்ற அட்டகாசமான ஆக்ஷன் படங்களை இயக்கியவர். 2010 இல் வெளிவந்த அன்ஸ்டாப்பபிள்தான் கடைசிப்படம். 2012 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் வின்சென்ட் தாமஸ் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.