ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தென்னிந்தியா அறியப்படுகிற நடிகை. டாடி என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்களுக்கும் பரிட்சயம். இன்றைய தேதியில் அதிக நாயகி மையப் படங்களில் நடிப்பவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அவரை தமிழர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மற்றும் தாத்தா யார் என்பதை அறிந்ததும் சிரஞ்சீவிக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
ராஜேஷின் தந்தை அதாவது ஐஸ்வர்யாவின் தாத்தா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர். படங்களும் தயாரித்திருக்கிறார். பெயர் அமர்நாத். மகாவரி மயலு, அமரசந்தேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தர்மேந்திராவின் அன்கீன் இந்தித் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரது இளைய மகன்தான் ராஜேஷ். தந்தையைப் போல ராஜேஷும் நடிகரானார். நெலவங்கா, ரெண்டு ஜல்ல சீதா, க்ரிஷ் கர்னாட் பிரதான வேடத்தில் நடித்த ஆனந்த பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1991 இல் மம்முட்டி நடிப்பில் வெளியான அனஸ்வரம் படத்தில் வில்லனாக மலையாளத்தில் அறிமுகமானார்.
ராஜேஷ் நாகமணி என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யாவுக்கு எட்டு வயது இருக்கையில் ராஜேஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இரு அண்ணன்களும் அடுத்தடுத்து விபத்தில் மரணமடைந்தனர். பால்யத்திலிருந்து சோகத்தையும், இழப்புகளையும் எதிர்கொண்டவர் என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷின் சிரிப்புக்குப் பின்னால் எப்போதும் ஒரு சோகம் இழையோடிக் கொண்டிருக்கும். தாய் நாகமணியின் முயற்சியால் ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகில் நுழைந்தார். இப்போது அவர் முன்னணி நடிகை. 1991 இல் ஐஸ்வர்யாவின் அப்பா ராஜேஷ் மம்முட்டிக்கு வில்லனாக மலையாளத்தில் அறிமுகமானார். சரியாக 16 வருடங்களுக்குப் பிறகு 2017 இல் ஜோமோன்டெ சவிசேஷங்கள் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஐஸ்வர்யா ராஜேஷின் ஜோடி. காலம்தான் எத்தனை விசித்திரமானது.
ஐஸ்வர்யா ராஜேஷின் அத்தை - தந்தையின் மூத்த சகோதாரிஸ்ரீ லக்ஷ்மியும் நடிகைதான். ஆர்.சி.சக்தியின் ஸ்பரிசம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதில் எஸ்.வி.சேகருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அதிகமும் தெலுங்குப் படங்களில். தமிழில் கடைசியாக டோனி திரைப்படத்தில் நடித்தார். தெலுங்கு சினிமாவில் நடிப்பதுடன் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தா அமர்நாத், தந்தை ராஜேஷ், அத்தை ஸ்ரீ லக்ஷ்மி, அம்மா நாகமணி என அனைவரும் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று தலைமுறையாக சினிமாவில் இருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் அவர்களின் கனவை நனவாக்கும்வகையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிரபலம் அடைந்திருக்கிறார். கனவுகள் காலங்கடந்தாலும் பலிக்காமல் போவதில்லை என்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் ஓர் உதாரணம்.