சிறு வயது முதலே பள்ளி நாடகங்களில் மேடையேறிய விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ’வெற்றி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானார். தொடர்ந்து எஸ்.ஏ.சி இயக்கிய நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற பல படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இவை அனைத்துமே சிறு வயது விஜயகாந்த் கதாபாத்திரங்கள் என்பது கூடுதல் தகவல்.
விஸ்காம் படித்துக் கொண்டிருக்கும் போது, சினிமாவில் கதாநாயகனாக விரும்பிய விஜய், அந்த விருப்பத்தை தனது தந்தையிடம் தெரிவித்தார். வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க, கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் ஆர்வம் மட்டுமல்லாமல் அவருக்கு திறமையும் இருப்பதை கண்டறிந்த எஸ்.ஏ.சி, 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் அவரை ஹீரோவாக அறிமுகமாக்கினார்.
தொடர்ந்து தன் தந்தையின் இயக்கத்திலேயே நடித்து வந்த விஜய், ராஜாவின் பார்வையிலே படத்தில் முதல்முதலாக வேறொரு இயக்குநரின் இயக்கத்தில் நடித்தார். அதில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த இன்னொரு நடிகர் அஜித். இதன் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்துக்கும் சேர்த்தே விஜய்யின் தாயார் ஷோபா சமைத்துக் கொடுப்பார். அந்தளவு இருவரும் அந்நாளில் குடும்ப நண்பர்களாகவே இருந்துள்ளார்கள்.
விஜய்யின் வாழ்க்கையில் ஓர் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர்கள் அவருடைய கல்லூரி கால நண்பர்கள். தனது வெற்றிக்கு பக்க பலமாக இருந்தவர்கள் தனது நண்பர்கள்தான் என பல பேட்டிகளில் கூறியுள்ள விஜய், வெற்றி, தோல்வி, சோகம், கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் அவர்களுடன்தான் பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். விஸ்காம் படித்த காலத்தில் இருந்து தற்போதுவரை அதே நட்பு கூட்டணியை தொடரும் விஜய், படப்பிடிப்பு பணிகளுக்கு மத்தியிலும் நண்பர்களுடன் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
விஜய்யின் கேரியரில் முதல் சில்வர் ஜுப்ளி படம் பூவே உனக்காக. சென்னையில் ஒரு பிரபல திரையரங்கில் தன் நண்பர்களுடன் இப்படத்தை பார்க்க விஜய் சென்றுள்ளார். அப்போது அவரை அடையாளம் கண்டு ரசிகர்கள் சூழ்ந்துகொண்ட தருணம்தான், தான் ஸ்டார் நடிகர் அந்தஸ்தை எட்டிவிட்டதாக உணர்ந்த முதல் தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி கணேசனுடன் ஒன்ஸ் மோர் படத்தில் விஜய் நடித்திருக்கிறார். அந்த படம் உருவான சமயத்தில்,” இந்த கால இளம் நடிகர்களில் என்னை வியப்பில் ஆழ்த்திய பையன் இவன்தான்.. இவன் நிச்சயம் சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பான்” என சிவாஜி பெருமிதத்துடன் கூறினாராம்.விஜய்யின் நிஜ வாழ்க்கை காதல் கதையும் திரைப்படங்களுக்கு இணையான சுவாரஸ்யத்தை கொண்டிருக்கும்.
ஆரம்ப நாட்களில் விஜய்யின் பல வெற்றி படங்கள் ரீமேக் படங்களாகவே இருந்தன. குறிப்பாக தெலுங்கு, மலையாள மொழிகளில் ஹிட்டடிக்கும் படங்களை உடனடியாக பார்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்த விஜய் கதை பிடித்திருந்தால் அதன் ரீமேக் உரிமையையும் கைப்பற்றிவிடுவார். அந்தவகையில் காதலுக்கு மரியாதை படத்தில் தொடங்கி நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, பிரென்ட்ஸ், பத்ரி என விஜய் நடித்த பல படங்கள் ரீமேக் படங்களே.
கல்லூரியில் விஜய்யுடன் படித்த ஒருவர் பின்னாளில் அவருடைய படத்திலேயே அறிமுகமானார். அந்த நடிகர் சூர்யா. முதலில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பின்னர் சூர்யா நடித்தார். அதன்பின் திரையுலகில் விஜய்க்கு இருக்கும் வெகுசில நண்பர்களில் ஒருவராக சூர்யா மாறிபோனார். விஜய்யும் நானும் மாமன் மச்சான் என பேசுமளவு பிரெண்ட்ஸ் என ஒரு பேட்டியில் சூர்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் மீது தற்போதுவரை வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர் ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்பதுதான். ஆனால் தன்னுடைய ஆரம்ப காலக்கட்டங்களில் விஜய் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பிரியமுடன் படத்தில் ஒரு ஆண்டி ஹீரோவாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். பலர் வேண்டாமென மறுத்தும் அதில் வரும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் விரும்பி நடித்தார்.
அதேபோல் ஆரம்ப காலத்தில் பல சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து விஜய் நடித்துள்ளார். செல்வா படத்தின் கிளைமாக்ஸ், குஷி படத்தில் பல அடி உயரத்தில் இருந்து கயிறு கட்டி தலைகீழாக குதித்தது, பத்ரி படத்தில் நிஜமாகவே கைகளில் ஜீப்களை ஏற்றிக்கொண்டது என பல ரிஸ்க் காட்சிகளில் விஜய் நடித்துள்ளார்.
முதல் படத்தில் இருந்து வருடத்திற்கு மூன்று படம் என்ற வேகத்தில் நடித்த வந்த விஜய்யின் கேரியரில் 25-வது படமாக கண்ணுக்குள் நிலவு வெளியானது. வணிக அளவில் இப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும் விஜய்யின் நடிப்புத் திறனை வெளிகொண்டு வந்த படங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் தனது மனைவி சங்கீதாவை வெளி உலகிற்கு விஜய் அறிமுகப்படுத்தியதும் இதன் படப்பிடிப்பு சமயத்தில்தான்.
விஜய் – வடிவேலு கூட்டணி என்பது எப்போதுமே ஸ்பெஷல்தான். சிலரெல்லாம் நடித்தால்தான் சிரிப்பு வரும் ஆனால் வடிவேலு செட்டுக்குள் வந்தாலே சிரிப்பு வந்துவிடும் என வடிவேலு குறித்து ஒருமுறை விஜய் கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சிகள் அனைத்தும் அன்றைய தேதியில் மிகவும் பிரபலம். ஆனால் அன்றை விட படம் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென நேசமணி உலகளவில் டிரெண்டானது பிரமிப்பின் உச்சம்.
ரஜினியின் தீவிர ரசிகரான விஜய், அண்ணாமலை படத்தில் ரஜினி பேசும் வசனத்தை பேசித்தான் தனது தந்தையிடம் நடிக்கும் வாய்ப்பையே பெற்றார். பின்னாளில் தான் ஒரு ஸ்டார் நடிகர் ஆன போதும் கூட பிரியமுடன், யூத், பகவதி என பல படங்களில் தான் ஒரு ரஜினி அபிமானி என்பதை உணர்த்தியிருப்பார். இதன் உச்சமாக புதிய கீதை படத்தில் ’அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா’ என ஒரு பாடலே பாடியிருப்பார்.
திருமலையைத் தொடர்ந்து வெளியான 'கில்லி', தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல் எனும் சாதனையை புரிந்து விஜய்யை வசூல் சக்கரவர்த்தியாக மாற்றியது. அதுவரை தமிழில் ரஜினி படங்களின் வசூலை ரஜினி படங்களே முறியடிக்கும். ஆனால் முதல்முறையாக ரஜினியின் படையப்பா வசூல் சாதனையை முறியடித்து அன்றைய தேதியில் அதிகம் வசூல் செய்த படம் எனும் புதிய சாதனையை கில்லி நிகழ்த்தியது. ’அடுத்த சூப்பர் ஸ்டார்’ விஜய்தான் எனும் விவாதம் தொடங்கியதும் அப்போதுதான்.
கதைகள் கேட்பதில் விஜய் தனக்கென்று எப்போதும் ஒரு குழுவை வைத்திருப்பார். பெரும்பாலும் அவர்கள் ஓகே செய்யும் படங்களில்தான் விஜய் நடிப்பார். சில சமயங்களில் அவர்கள் நிராகரிக்கும் படங்களிலும் விஜய் விருப்பத்துடன் நடித்ததுண்டு. அப்படி அவர் நடித்த படம்தான் திருப்பாச்சி. இந்த படம் விஜய்க்கு பி அண்ட் சி ஏரியாவில் கூடுதல் வரவேற்பை பெற்றுத்தந்தது.
திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என கமர்ஷியல் மசாலாக்களில் விஜய் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் அடுத்தடுத்து பெரும் வெற்றிகளை ருசிக்க, அதன்மூலம் ’அடுத்த சூப்பர் ஸ்டார்’ விஜய் எனும் சொல்லை மறைத்து அடுத்த விஜய் யார் எனும் போட்டியை இளம் நடிகர்களிடம் ஏற்படுத்தினார். புரட்சி தளபதி, சின்ன தளபதி என பட்டம் போட்டுக்கொள்ளும் அளவு இளம் நடிகர்களிடம் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் நீண்ட நாள் ஆசை. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இந்த கூட்டணி இணைவதாக இருந்தது. ஆனால் பைனான்ஸ் சிக்கலால் அந்த படம் நின்றுவிட, அதற்கு பதிலாக அந்த கால்ஷீட்டில் விஜய் நடித்த படம் தான் துப்பாக்கி. மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அந்த படம் விஜய்யின் கேரியரில் மைல்கல் படமாகவும் மாறியது.
ஆரம்பத்தில் ரசிகர்கள் சார்பில் இருந்து வரும் கடிதங்களை தவறாமல் படித்து விடுவது விஜய்யின் வழக்கம். அப்படி ஒருமுறை வந்த கடிதத்தில் இவரை 'இளைய தளபதி' என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இது இவருக்கு மிகவும் பிடித்து போக, பின்னாளில் இதையே தனது பட்டமாக்கிக் கொண்டார். மெர்சல் வரை ”இளைய தளபதி” என்று தன்னை அடையாளப்படுத்தி வந்த விஜய், மெர்சலில் இருந்து ”தளபதி” விஜய்யாக மாறினார்.
தன் ரசிகர்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கும் விஜய், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்தித்து அவர்களுடன் தனியாக புகைப்படம் எடுத்து வருகிறார். சேலம், கோவை, ஈரோடு என தன் படங்களின் விழாக்களை ஒவ்வொரு மாவட்டத்தில் வைத்து அதன் மூலம் மாவாட்ட வாரியாக தன் ரசிகர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் அதிக 100 கோடி படங்கள் கொடுத்த நடிகர் விஜய்தான். துப்பாக்கியில் தொடங்கி இவருடைய எட்டு படங்கள் 100 கோடி வசூல் மைல்கல்லை எட்டியுள்ளன. அதேபோல் தென்னக அளவில் அதிக 200 கோடி படங்கள் கொடுத்த நாயகனும் இவர்தான். மெர்சல், சர்கார், பிகில் என இவருடைய படங்கள் தொடர்ந்து மூன்று முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.
ஆரம்ப காலங்களில் தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தான் ஒரு நிலையான இடத்தை அடைந்த பிறகு அவர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதை விஜய் வழக்கமாகவே வைத்திருக்கிறார். அந்தவகையில் பிரெண்ட்ஸ் படத்தை தயாரித்த அப்பச்சன், ஆர்.பி.சௌத்ரி ஆகியோருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கால்ஷீட் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார் விஜய். அதேபோல் தனது 50-வது படத்தை தயாரிக்கும் பொறுப்பை காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகனுக்கும் மாஸ்டர் படத்தை தயாரிக்கும் பொறுப்பை தனது உறவினர் சேவியர் பிரிட்டோவுக்க்கும் வழங்கினார்.
தன்னுடைய படங்களின் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள தன் படங்களின் முதல் நாள் காட்சியை பெரும்பாலும் மாறுவேடத்தில் வந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து விடுவார். அதேபோல் ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை தெரிந்துகொள்ள பல சமயங்களில் மாஸ்க் அணிந்து கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிடுவார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இதேபோல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவியின் சொந்த ஊரான லண்டன்தான் விஜய்யின் ஃபேவரிட் சுற்றுலா தலம். முன்பெல்லாம் வருடம் ஒருமுறை குடும்பத்துடன் லண்டன் சென்றுவந்த விஜய், தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பறந்துவிடுவார். அப்படி அவர் வெளிநாடு வீதிகளில் தனது மகனுடன் ஜாலியாக வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் பின்னர் சமூக வலைதளங்களில் வைரல் பட்டியலில் இணைந்துள்ளன.
விஜய்யின் சிறந்த ஆன் ஸ்க்ரீன் ஜோடியாக இன்றுவரை எல்லோராலும் கருதப்படுபவர் சிம்ரன். இந்த கூட்டணி இணைந்தாலே அந்த படம் ஹிட்தான் என்று சொல்லும் அளவு, அந்த காலகட்டத்தில் இவர்களுடைய ஜோடி வெற்றிகரமான ஒரு ஜோடியாக உலா வந்தது. அதன்பின் அசின், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் தளபதியுடன் இணைந்து ஹாட் ட்ரிக் ஹிட் கொடுத்துள்ளனர்.
விஜய் படங்களின் தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற வாதத்தை வலுபெற செய்துள்ளது. அண்மை காலமாக விஜய்யுடைய படங்கள் ரஜினி படங்களுக்கு இணையாகவும் சில சமயங்களில் ரஜினி படத்தை விடவும் அதிக வசூல் செய்வதால் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகனாக விஜய் வளர்ந்துவிட்டார் எனவும் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முன்பு தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிவந்த விஜய் அண்மை காலமாக பிறந்த நாளின் போது யாருக்கும் தெரியாமல் தனிமையில் இருப்பதை அதிகம் விரும்புகிறார். எனினும் அவர் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ அல்லது முன்னோட்டங்களோ அவருடைய பிறந்தநாளில் வெளிவந்து இணையத்தில் சாதனை படைப்பது வாடிக்கையாகி வருகிறது.