ஆக, நம் வாழ்க்கையில் வேலை தேடும் படலம் அவ்வபோது வந்து சென்று கொண்டே இருக்கிறது. அதே சமயம், கால மாற்றத்திற்கு ஏற்ப வேலை தேடும் சமயங்களில் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. நம் அறிவுக்கும், திறமைக்கும் வேலை கிடைக்கும் என்றாலும், அதற்கான முன் தயாரிப்பு பணிகளை நாம் கனக்கச்சிதமாக செய்து கொள்ள வேண்டும்.
சிறிய காகிதத்தில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் : அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டு வைத்துக் கொள்வதும், பின்னர் அதை மறந்து விடுவதும் மனித இயல்பு ஆகும். ஆகவே, நம்முடைய திட்டமிடல்கள் என்ன என்பதை ஒரு சிறு துண்டு காகிதத்தில் குறிப்புகளாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, புதிய நிறுவனத்திற்கு நீங்கள் நேர்காணலுக்கு செல்ல இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு உங்களை நீங்கள் எப்படி அறிமுகம் செய்து கொள்ளப் போகிறீர்கள், உங்களுடைய அனுபவங்களை எப்படி எடுத்துரைக்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
தரமான ரெஸ்யூம் தயாரிப்பு தேவை : நீங்கள் யார் என்பதை உலகுக்கு அடையாளப்படுத்துவதில் உங்கள் ரெஸ்யூம் என்னும் சுயவிவர ஆவணத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆகவே அதை நீங்கள் நல்ல தரத்தில் தயார் செய்ய வேண்டும். சுய விவரக் குறிப்பில் உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட வேண்டும். கூடுமான வரையில் ஒரு பக்கத்தில் முடிந்தால் நல்லது. வள, வளவென்று இழுத்துச் செல்லக் கூடாது.
மூன்று பாகங்களாக பிரிக்கவும் : ஒரு சுயவிவரக் குறிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உங்கள் மனதில் குழப்பம் நிலவுகிறதா? இனி அந்தக் கவலை வேண்டாம். உங்கள் ரெஸ்யூமை 3 பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். முதல் பாகத்தில் உங்களை பற்றி இரண்டு வரிகளில் விவரித்து எழுதுங்கள். அடுத்து நீங்கள் என்ன செய்ய இருக்கிறீர்கள் என்பதையும் இங்கே குறிப்பிடவும். இரண்டாவதாக உங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை பட்டியலிடுங்கள். தொழில்நுட்ப திறன்களையும் இங்கு விவரிக்கலாம். மூன்றாவதாக உங்கள் பணி அனுபவங்களை விவரித்து கூறுங்கள்.