அலுவலகப் பணியிடங்களில் உள்ள தலைமைப் பொறுப்புகளில், ஆண்களை ஒப்பிடுகையில் பெண்கள் குறைவான (18 சதவீத அளவு) பிரநிதித்துவம் மட்டுமே கொண்டுள்ளனர். ஆனால், ஆண்களை ஒப்பிடும்போது தொழில்முனைவோராக உருவாகுவதற்கு பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்று வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் லிங்க்டு இன் இணையதள நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார கருத்தரங்கு 2022, உலக அளவிலான பாலின இடைவெளி அறிக்கை என்ற நிகழ்வில் இதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 2016ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் புதிதாக உருவான தொழில்முனைவோரை ஒப்பிடும்போது ஆண்கள் 1.79 மடங்கு உருவாகியுள்ளனர். ஆனால், பெண்கள் 2.68 மடங்கு தொழில்முனைவோராக உருவாகியுள்ளனர்.
குறிப்பாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான கொரோனா காலகட்டத்தில் பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சி விகிதம் என்பது மிக கூடுதலாக இருக்கிறது. நிறுவனங்களில் போதிய முன்னுரிமை இல்லை : நிறுவனப் பணிகள் அல்லது அலுவலகப் பணிகளின் தலைமை இடங்களில் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல், பணியிடங்களில் ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பும் அவ்வளவாக கிடைப்பதில்லை.
பணியிடங்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிக அதிகமான தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். என்னதான் நிறுவனங்களில் புறக்கணிக்கப்பட்டாலும் பெண்கள் தங்களுக்கான சுயமான வழித்தடத்தை அமைத்துக் கொண்டு தொழில் துறையில் முன்னேறி வருகின்றனர் என்று லிங்க்டு இன் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் ருச்சே ஆனந்த் தெரிவிக்கிறார்.
லிங்க்டு இன் தளத்தில் இலவச கோர்ஸ்கள் : பணியிடங்களில் வழங்கப்படும் பிரதிநிதித்துவத்தில் நிலவும் பாலின வேறுபாடுகளை மனதில் வைத்து, பெண்களை திறன் ரீதியாக மேம்படுத்துவதற்கான கோர்ஸ்களை லிங்க்டு இன் இணையதள நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இந்த கோர்ஸ்களை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரையில் இலவசமாக படித்துக் கொள்ளலாம். பெண்களுக்கான தலைமைத்துவ பண்பு உத்திகள், புதிய பெண் நிறுவனர்கள் நிதி பெறுவதற்கான ஆலோசனைகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் இலவச கோர்ஸ்கள் கற்பிக்கப்படுகின்றன.