இளமையாக இருக்கும் போது சுறுசுறுப்பும், துடிப்பும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும். குறிப்பாக கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க கூடிய 20 வயதில், என்ன மாதிரியான வேலைக்குப் போகலாம், எந்த துறையில் சாதிக்கலாம், எங்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்ற தேடல் அதிகரிக்கும். முதன் முதலாக தொழில்முறையை கற்க கூடிய 20 வயதில் இருக்கும் இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள் யாருமே இந்த 4 தவறுகளை மறந்தும் செய்யக்கூடாது. அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
1. ஒரேயொரு வேலையை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குவது : படித்து முடித்த புதிதில் குறிப்பிட்ட கல்விக்கு ஏற்றார் போன்ற வேலைகளை மட்டுமே தேர்வு செய்ய நினைப்பது இயல்பானது. ஆனால் அதற்காக ஒரே ஒரு குறிப்பிட்ட துறை அல்லது வேலையில் மட்டுமே நீங்கள் நன்றாக பணியாற்ற முடியும் என்பது கட்டுக்கதை. உண்மையில், சூழ்நிலைகள் மற்றும் தேர்வுகளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்ற தேவையான நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும். எப்போதும் குறிப்பிட்ட வேலை அல்லது துறையை மட்டுமே சார்ந்திருக்காமல் எந்த துறையிலும் ஜொலிக்கும் அளவிற்கு துறையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
2. மனதுக்கு மகிழ்ச்சி தரும் வேலையை தேர்வு செய்வதில்லை : கடுமையாக உழைத்து வேலை பார்த்து பணம் சம்பாதிப்பது எல்லாமே மகிழ்ச்சியாக இருப்பதற்காக தான். எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், அதைச் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அதனால் சோர்வு தான் உண்டாகும். மேலும் வேலையில் ஏற்படும் அதிருப்தி காரணமாக சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவுகளிடம் எப்போதும் எரிச்சலுடனும், கோபத்துடனும் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனவே ஒரு வேலை அல்லது தொழிலை தேர்வு செய்யும் முன்பு நன்றாக தெரிந்த, உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
3. முதலீடு செய்ய யோசிப்பது : இளம் வயதிலேயே சேமித்து என்ன செய்யப்போகிறோம் என எண்ணக்கூடாது. ஏனென்றால் 20 வயது தான் சேமிக்கவும், முதலீடு செய்யவும் சரியானது. இதனால் நீங்கள் எதிர்கால தேவைகளுக்காக யாரிடமும் நிதி கேட்டு நிற்கும் நிலை ஏற்படாது. நிதி நிபுணர்களின் கருத்துப்படி, உங்கள் சம்பளத்தை 50-30-20 என பிரித்துக்கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தில் 50 சதவீதம் அத்தியாவசிய தேவைகளுக்கும், 30 சதவீதம் ஆசைக்கும், 20 சதவீதம் சேமிப்பிற்கும் செலவிட வேண்டும்.
4. சோசியல் மீடியா தொடர்புகளை புறக்கணிப்பது : இன்றைய காலக்கட்டத்தில் சோசியல் மீடியாக்கள் வேலை வாய்ப்பு, வணிகம், விளம்பரம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கும் உறுதுணையாக இருக்கிறது. எனவே சோசியல் மீடியாவில் உள்ள தீமைகளை புறந்தள்ளிவிட்டு, உங்களுடைய எதிர்கால நன்மைக்காக அதில் ஆக்டிவாக செயல்பட வேண்டும். யார் மூலம் என்ன மாதிரியான விஷயங்கள் நமக்கு கிடைக்கும் என்பது தெரியாது, எனவே காலக்கட்டங்களுக்கு ஏற்ப தொடர்புகளையும் புதுப்பித்துக் கொண்டே இருங்கள். விழாக்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். அங்கும் சில முக்கியமான நபர்கள் இருக்க வாய்ப்புள்ளது.