வித்யாலட்சுமி கல்வி கடன் போர்டல் உயர் கல்வித் துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) நிதிச் சேவைத் துறையுடன் இணைந்து செயல்படுகிறது. கல்விக் கடன் விண்ணப்பங்களை மாணவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், போர்ட்டலை அணுகுவதன் மூலம் வங்கிகளுக்குப் விண்ணப்பிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம். இந்த போர்டல் தேசிய உதவித்தொகை போர்ட்டலுக்கான இணைப்புகளையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் படிக்க ரூ.7.5 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் படிக்க ரூ.15 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
ரூ.4 லட்சம் வரையிலான கடனுக்கு பிணை அல்லது மார்ஜின் தேவையில்லை, வட்டி விகிதம் (PLR) கடன் விகிதங்களை தாண்டக்கூடாது. ரூ. 4 லட்சத்துக்கும் மேலான கடனுக்கான வட்டி விகிதம் பிஎல்ஆர் மற்றும் 1 சதவீதத்தை தாண்டக்கூடாது. படிப்பு முடிந்த பிறகு ஒரு வருட கால அவகாசத்துடன் 5 முதல் 7 வருட காலத்திற்குள் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். உயர்கல்வியின் நோக்கத்திற்காக தனிப்பட்ட கடன் வாங்கும் மாணவர்கள் செலுத்தும் வட்டி 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் 80E பிரிவின் கீழ் கழிக்கப்படலாம்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் கடனளிப்பவர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் சரிபார்க்க வேண்டும். வளர்ந்து வரும் இந்தியாவில் உயர்கல்வியை பெற கல்விக்கான கடன் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவும் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். மேலும் பல்வேறு துறைகளில் உள்ள வேலைகளை பெற போட்டி நிறைந்த உலகில் உயர்கல்வி என்பது இன்றியமையாததாகும்.
இந்தியாவில் தற்போது, கல்விக் கடனுக்கு ஒருவர் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். வங்கிகள் சில சமயங்களில் தாங்கள் வழங்கும் சலுகைகள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய முழுமையான தகவல்களை கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அவற்றை கடன் வேண்டி விண்ணப்பிக்கும் பெற்றோரும் மாணவர்களும் அறியவேண்டியது அவசியம்.
மொராட்டோரியம் காலம் (Moratorium) : கடன் வாங்கியவர் கடன் வாங்கிய கடனுக்கு மாதாந்திர தவணை செலுத்தாதபோது, கடன் திருப்பிச் செலுத்தும் விடுமுறையைக் குறிக்கிறது. அரசாங்கத்தின் ‘மாதிரி கல்விக் கடன் திட்டத்தின்’ படி இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ படிப்பை முடித்த பிறகு திருப்பிச் செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
செலவழிக்கப்பட்ட தொகை (Expenses) : வங்கியிடம் நீங்கள் கேட்ட தொகை, என்னென்ன செலவுகளை ஈடுகட்ட உறுதியளிக்கிறது என்பதைச் சரிபார்க்கவும். பொதுவாக, கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான பயணச் செலவு, புத்தகச் செலவு போன்றவை ஈடுசெய்யப்படும். இருப்பினும், அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு விவரத்தையும் சரிபார்க்க வேண்டும்.