பள்ளி கல்லூரி விடுமுறையை முன்னிட்டும், தரைப்பகுதிகளில் நிலவும் வெயிலை சமாளிக்கவும் கொடைக்கானலில் நிலவும் இதமான, ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுக்கிறார்கள்.
வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவிகளில் சீராக கொட்டி வரும் நீரில் குளித்தும், சில்லென்ற நீரில் கால்களை நனைத்தும் , நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் பூத்து குழுங்கும் வண்ண வண்ண மலர்களைக் கண்டு ரசித்தும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்,
மேலும் சுற்றுலாப்பயணிகளின் தொடர் வருகையால் அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், கல்லறைமேடு, உகார்த்தேநகர் பிரதான சாலைகளில் அவ்வப்போது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாது, காத்திருந்து சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து உற்சாகமடைந்து வருகின்றனர்.