திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாதலமாகும். இங்கு தூண்பாறை, குணாகுகை, பசுமைபள்ளதாக்கு, பைன்மரச்சோலை, மோயர்சதுக்கம், பிரையண்ட்பூங்கா, ரோஜாபூங்கா என பல்வேறு சுற்றுலாதலங்கள் இருந்தாலும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக அமைந்திருப்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி, தொப்பிதூக்கிப்பாறை, அமைதிப்பள்ளதாக்கு, மதிகெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலாதலங்களாகும்.
இந்த பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறையினரின் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி நாள் தோறும் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாப்பயணிகள் சென்று அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் மனதிற்கும், கண்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து வருவது வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரை வரை சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது யானைகள் மீண்டும் காட்டு பகுதிக்கு சென்றதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.