இந்நிலையில் கடந்த ஆண்டு அதிக அளவு மலைப்பகுதிகளில் பெய்த மழை மற்றும் தொடர் மேகமூட்டம் காரணமாக உறைபனி சற்றே தாமதமானது. டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் உறைபனிப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் அவ்வப்போது ஒரு சில நாள் மட்டும் உறைபனி நிலவியது.
புத்தாண்டு பிறந்தது முதல் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக உறைபனியின் தாக்கமும் கடும் குளிரும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை நிலவி வருவதாலும் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் 6 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்ப நிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமைப் புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித் துளிகள் உறைந்து உறைபனியாக மாறியது இந்த உறைபனியானது கொடைக்கானல் நீர்பிடிப்புப் பகுதியான ஜிம்கானா மற்றும் பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல் அரசு விளையாட்டு மைதானம், பாம்பார்புரம் உள்ளிட்ட பல்வேறுப்பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது.
இந்தப் பகுதிகளில் உள்ள பசுமையான புற்களின் மேல் உறைபனி பொழிவு இருந்ததால் வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்று காட்சியளித்தது, மேலும் நட்சத்திர ஏரியிலும் சூரிய ஒளி பட்டதும் படர்ந்திருந்த பனி ஆவியாகி சென்ற காட்சிகளும், இலைகள், புற்களின் மேலும் வாகனங்களின் மேற்பரப்பிலும் உறை பனி படர்ந்திருந்த காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.