இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் 1948-ல் உருவானது இஸ்ரேல் நாடு. பாலைவனமும், மலைகளும் நிறைந்த இஸ்ரேல் நாட்டின் மொத்த பரப்பளவு 27,800 சதுர மைல். அதில் விவசாயத்திற்கு பயன்படுவது வெறும் 4,360 சதுரமைல் தான். அதை வைத்தே உலக நாடுகள் பலவற்றிற்கும் வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றமதி செய்து வருகிறது அந்த நாடு. இதற்கு காரணம் அவர்கள் பின்பற்றும் நீர் மேலாண்மையும், உயர் வேளாண் தொழில்நுட்பமும் தான்.
இஸ்ரேலி்ன் வடக்குப்பகுதியில் சிறிதளவு மழை பெய்யும். ஆனால் தெற்குப் பகுதி எப்போதும் வறண்டு தான் கிடக்கும். பூமிமட்டத்தில் இருந்து 700 மீட்டர் தாழ்வாக இருக்கும் கலிலோ ஏரியில் நீரை சேமித்து அதை பம்ப் மூலம் வெளியேற்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அப்படி என்றால் தண்ணீரை அவர்கள் எப்படி சிக்கனமாக செலவு செய்வார்கள். அந்த உயரிய நீர் மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பத்தை தான் இப்போது தமிழகத்தில் அறிமுகம் செய்திருக்கிறது அரசு.
இஸ்ரேல் வேளாண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் பயிற்சி அளிக்க இந்தியா முழுவதும் 29 மகத்துவ மையங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையம். CENTRE OF EXCELLENCE FOR VEGETABLES என்ற பெயரில் 2012 ஆம் ஆண்டு இந்த வளாகம் தொடங்கப்பட்டது
உயர் தொழில்நுட்பத்தில், மிக குறைவான தண்ணீர் மற்றும் பரப்பளவில் அதிக மகசூல் பெறுவது எப்படி என இந்த மையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்ப உதவியுடன் கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, வெள்ளரி, காளிபிளவர், மிளகாய், குடைமிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூச்சி புகாத பசுமைக்குடில் அமைத்து, சொட்டு நீர் பாசம் மூலம் தேவையான உரம் கலந்த தண்ணீர் விட்டு குறுகிய காலத்தில் களையில்லாமல் அதிகப்படியான மகசூல் எடுக்கிறார்கள்.
ஒரு ஏக்கர் திறந்தவெளி நில விவசாயத்தில் கிடைக்கும் மகசூலை விட இந்த தொழில்நுட்பத்தில் இரண்டரை மடங்கு அதிக மகசூல் கிடைக்கும் என்கிறார்கள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள். பயிர்களுக்கு ஏற்ற தட்பவெட்ப சூழலை உருவாக்கினாலே அதிக மகசூல் கிடைக்கும் என விளக்கம் தருகிறார்கள் அதிகாரிகள். அதன்படி குறைந்த பரப்பளவில் நிறைந்த மகசூலையும் பெற்று வருகிறார்கள்.
இந்த மையம் விவசாயிகளுக்கு பயன்படுவதோடு நின்று விடாமல் எதிர்கால விவசாயிகளையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வளாகத்தில் தோட்டக்கலைத்துறை பயிற்சி மையமும் செயல்படுகிறது. இரண்டாண்டு பட்டயப்படிப்பு இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மூலம் இதற்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்டுக்கு 50 பேர் இதுவரை 100 பேர் இங்கு பட்டயப் படிப்பு முடித்துள்ளார்கள்.