கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று இரவு வேளையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதன்காரணமாக அதிகாலை வேளையில் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ரம்யமாக காட்சியளித்தது, குறிப்பாக நட்சத்திர ஏரி முழுவதும் பனி படர்ந்து காணப்பட்டது. சூரிய ஒளி பட்டதும் நட்சத்திர ஏரியில் படர்ந்திருந்த பனியானது ஆவியாகி சென்ற காட்சிகள் காண்போரின் கண்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த அற்புத காட்சியை அதிகாலையில் நட்சத்திர ஏரியை சுற்றி நடைப்பயிற்சி சென்றவர்களும் இந்தப்பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.