அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால் இறுதிச்சடங்கு நடத்தும் கூடங்கள் சடலங்களால் நிரம்பியுள்ளன. கல்லறைகள், தகனக்கூடங்கள் ஆகியவை ஒரு வாரத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகரித்து வரும் சடலங்களை கையாள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. நியூயார்க்கில் உள்ள இறுதிச்சடங்கு கூடத்தின் உரிமையாளரான பாட் மர்மோ கடந்த 5 நாட்களில் 5 ஆண்டு அனுபவத்தை பெற்று விட்டதாகக் கூறுகிறார். வழக்கமாக 40 முதல் 60 சடலங்களை கையாளும் நிலையில் நேற்று காலை 185 சடலங்கள் இறுதிச் சடங்கிற்காக காத்துக் கொண்டிருந்தன. அமெரிக்காவில் கொரோனாவால் நிகழும் அவலத்தைக் காணும் பாட் மர்மோ, கொரோனா வைரஸ் மனிதர்களின் சமன்பாட்டில் இருந்து மதத்தை நீக்கி விட்டதாகக் கூறுகிறார் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2 லட்சத்து 45 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6098 பேர் உயிரிழந்தும் 10,441 பேர் குணமடைந்துள்ளனர்.