இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. போதிய படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனைகளுக்கு வெளியே சாலைகளிலேயே மக்கள் தஞ்சமடைந்துள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதற்கு ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கோனோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலைப் போக்க சிங்கப்பூர், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தங்களால் இயன்ற உதவிகள் செய்து நேசக்கரம் நீட்டியுள்ளனர். தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. கர்நாடாகாவில் பாதிப்பு கையை மீறிச் சென்றுவிட்டதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்கிடையே, நாடு முழுவதும் 3வது கட்ட தடுப்பூசி போடும் பணி மே 1 ஆம் தேதி தொடங்குகிறது.
18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான வயது கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும் என நாடு தழுவிய அளவில் குரல்கள் எழுந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பதிவு செய்யாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது எனவும் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பேசிய கோ-வின் இயக்குநர் பேசும்போது, மே 1ம் தேதி 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது. இதனால், பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆரோக்கிய சேது மற்றும் கோவின் இணையதளங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 28) முதல் www.cowin.gov.in இணையதளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலி வழியாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம். தடுப்பூசி செலுத்துவதற்காக, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொழில்நிறுவனங்களுடன் இணைந்து கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, தடுப்பூசி மையங்களில் ஏற்படும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.