

கொரோனா தொற்று உலகம் எதிர்கொள்ளும் புதிய வைரஸ் என்பதால் அதன் தாக்கம் இன்னும் முழுமையாக கண்டறிய முடியாமல் உள்ளது என்பதே உண்மை. இந்நிலையில் இருக்கும் மக்களைக் காட்டிலும் புதிதாக பூமியில் உயிர்த்தரிக்கும் பச்சிளங் குழந்தைகளையும் கொரோனாவிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பு மிகப்பெரியது.


அரசாங்கத்தை காட்டிலும் தாய்க்கும் தந்தைக்குமான பொறுப்புதான் மிக முக்கியமானது. அந்த வகையில் பலருக்கும் தாய்க்கு கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற குழப்பமும் அச்சமும் நீடித்து வருகிறது.


நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். இன்னும் கேட்டால் உங்கள் குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க தாய்ப்பால்தான் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து. இதை யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதுவும் குழந்தை பிறந்தவுடனே கொடுக்கும் தாய்ப்பாலில்தான் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே அதில் கவனமாக இருங்கள்.6 மாதம் வரையிலும் தாய்ப்பாலை கட்டாயமாக்குங்கள்.


கொரோனா தொற்று இல்லை என்றாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது கைகளை நன்குக் கழுவிக் கொள்ளுங்கள். மார்பகங்களைக் கழுவிக்கொள்ளுங்கள். முகத்தில் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள்.


வீட்டில் இருப்போரையும் சுத்தமாக இருக்கச் சொல்லுங்கள். குழந்தையை மற்றவர்கள் தொட்டாலோ, தூக்கினாலோ அதற்கு முன் கைகளைக் கழுவ சொல்லுங்கள். வீட்டையும் அடிக்கடி துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.