கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய சில நாட்களிலேயே நம்மிடம் பிரபலமானது ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் - Finger Pulse Oximeter.இது நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு மற்றும் நாடித்துடிப்பின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய எலெக்ட்ரானிக் கருவி. கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால், உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு வெகுவாகக் குறையும். இயல்பாக உடலில் உள்ள மொத்த ஆக்ஸிஜனின் அளவு 95 -100 என்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரல் நோய், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், ரத்தச்சோகை, மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் இருக்கலாம்.
நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத Asymptomatic நிலையில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட 14 நாள்களுக்குப் பிறகும் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள அறிகுறி இல்லாத தொற்றாளர்களுக்கு மருத்துவச் சிகிச்சை இல்லாமலேயே சரியாகிவிடும். மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் அறிகுறி இல்லாத தொற்றாளர்களுக்கு உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும். அதைக் கண்காணிக்கவே இந்தக் கருவி பயன்படுகிறது.