திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் விவசாயத்தை மட்டும் நம்பி விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக நெல், மணிலா மற்றும் கரும்பு ஆகியவற்றை அதிகளவில் பயிர் செய்யப்பட்டு வந்தது. இந்த வகையான பயிர்களுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதால் தற்போது விவசாயிகள் பழ வகைகளை பயிர் செய்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய் வரையில் வருமானம் கிடைத்து வந்தது. வியாபாரிகள் விவசாயிகளிடம் வாங்கிய பழங்களை ஆந்திரா, கர்நாடகா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.
ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் அவர்களது வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த 144 தடை உத்தரவால் பழ விவசாயிகள் பழங்களை அறுவடை செய்து வாகனங்களில் ஏற்றி சந்தைகளில் சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் பயிர்களில் பழங்களை விட்டதால் தற்போது பழங்கள் அனைத்தும் வீணாகி அழுகி போய் உள்ளது.
இதனால் லட்சக்கணக்கில் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த பழங்களை இலவசமாக மீன் பண்ணை, மாட்டு பன்ணை, பன்றி பண்ணை, உள்ளிட்ட பண்ணைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது என்றும் விவசாயிகள் வேதனையாக கூறினர். பண்ணைகளில் இருந்து வருபவர்கள் ஓரு வேன் பழங்களுக்கு சுமார் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விவசாயிகளுக்கு அளித்து பழங்களை எடுத்து செல்கின்றனர்.