நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொருநாளும் 3 லட்சத்திற்கும் மேலான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், COVID-19 நோயாளிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தொலைதொடர்பு உதவியுடன் வீட்டிலேயே குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானால் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. முதலில் ஒருவர் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர் அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டுமா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு நோயாளிகள் எதிர்கொள்ளும் மற்றொரு சிக்கல் பலவீனம் ஆகும்.
இத்தகைய சூழ்நிலையில், ஒருவர் தங்களை வலுப்படுத்த ஆரோக்கியமான உணவு மற்றும் அதிகளவு நீர் குடித்தல் போன்ற அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒருவராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது குணமடைந்து வந்திருந்தால், கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய பலவீனத்தை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பலவகையான பழங்களை உண்ணுங்கள் : மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுதவிர உங்களுக்கு பிடித்த பிற பழ வகைகளையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் பழச்சாறினை குடிக்கவும். இது பலவீனத்திலிருந்து விடுபட உதவும். முடிந்தளவுக்கு, காலையில் பழங்களை அப்படியே சாப்பிடுவதையும் மாலை நேரங்களில் பழசாறுகளை பருகுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பலவகையான காய்கறிகளை சாப்பிடுங்கள் : காய்கறிகளை உட்கொள்வது உடல் வலிமைக்கு மிக அவசியம். ஒருவர் மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது பல்வேறு வகையான காய்கறிகளை சாப்பிட வேண்டும். கீரை, கேரட், தக்காளி, பீட்ரூட் அல்லது பீட்ரூட் உள்ளடக்கிய காய்கறி சாற்றையும் ஒருவர் குடிக்கலாம். இவற்றில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் உங்களுக்கு ஆற்றலை தருகின்றன.
மல்டிவைட்டமின்கள் : பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தால் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மல்டிவைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் துத்தநாக மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைபடி சாப்பிடலாம். மல்டிவைட்டமின்களை தவறாமல் எடுத்துக்கொள்வது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும்.
நுரையீரல் பயிற்சிகளை செய்யுங்கள் : உங்கள் நுரையீரலை வலுப்படுத்த கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு நீங்கள் நுரையீரல் பயிற்சிகளை மேற்கொள்வது மிக முக்கியமானது. எளிமையான யோக சுவாச பயிற்சிகள் முதல் மெழுகுவர்த்திகளை ஊதுவது மற்றும் ஸ்பைரோமீட்டரைப் பயன்படுத்துவது வரை பல்வேறு நுரையீரல் வலுப்படுத்தும் பயிற்சிகளை ஒருவர் செய்யலாம்.