கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் நாளிலேயே 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிக்கு திரும்பியுள்ளனர். இத்தாலியில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 9ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகளை சந்தித்து வந்தது. இந்நிலையில், ஏறக்குறைய 2 மாதத்திற்கு பிறகு இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின் தனிமனித இடைவெளி விட்டு ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரம், உற்பத்திதுறை உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. உணவகங்கள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.