

கோவையில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் வடிமைத்துள்ள "CORONA FREE CAB" பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. அப்படி என்ன உள்ளது இந்த கொரோனா ப்ரீ காரில்...என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவை, சேலம் , தருமபுரி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மாவட்டங்களுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு வாடகை கார்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அமர்நாத் என்ற வாடகை கார் உரிமையாளர் காருக்குள் வித்தியாசமான மாற்றங்களை செய்துள்ளார்.


காரின் உட்பகுதியில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புகள் அமைத்துள்ளார் அமர்நாத். இதனால் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு இடையேயான தொடர்பு தடுக்கப்படுவதாகவும், பயணிகள் கொரோனா அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என கூறுகிறார்.


அமர்நாத் காரினுள் மாற்றங்களை செய்த வடிவமைப்பாளர் பிலால், இது குறித்து கூறுகையில் வெளிநாடுகளில் வாடகை கார்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கார்களில் என்னென்ன மாற்றங்களை செய்துள்ளனர்? என ஒரு மாதமாக ஆய்வு செய்ததாகவும் அவற்றுள் செலவு குறைவாக காணப்பட்ட மாடலை பார்த்து வடிவமைத்துள்ளதாகவும் கூறுகிறார்.


கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கான ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வாடகை கார் ஓட்டுநர்கள், மீண்டும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என காத்திருக்கின்றனர்.


இந்த சூழலில் குறைந்த செலவில் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த கொரோனா ப்ரீ கார் மக்களிடம் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்