வால்பாறை மற்றும் டாப்சிலிப் செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையில் சுற்றித்திரியும் வன விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துசிறையில் அடைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென மண்டல தலைமை வன பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி உடுமலை மற்றும் அமராவதி என 1500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் நம் தேசிய விலங்கான புலி மற்றும் மாநில விலங்கான வரையாடுகள், யானை சிறுத்தை,கரடி,மான் மற்றும் ஐந்து வகையான குரங்கு இனங்கள் உட்பட பல அரிய வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
சுற்றுலாத்தலமான டாப்ஸ்லிப், ஆழியார் குரங்கு அருவி மற்றும் வால்பாறைக்கு செல்வதற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வால்பாறை இதில் 40 கிலோ மீட்டர் சாலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதிக்குள்தான் உள்ளது.
ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியை கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை வழி முழுவதுமாக ஆங்காங்கே வனப்பகுதிக்குள் சுற்றித்திரியும் வனவிலங்குகளை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தி சாலையில் சுற்றித்திரியும் வன விலங்குகளுடன் செல்பி எனும் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். குறிப்பாக சாலை ஓரத்தில் ஓய்வெடுக்கும் நமது மாநில விலங்கான வரையாடுகளை துன்புறுத்தி அதன் முன் நின்று செல்பி எனும் புகைப்படங்களை எடுத்து துன்புறுத்தி வருகின்றனர்.
அதேபோல் வனப்பகுதி சாலை முழுவதுமாக குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன குறிப்பாக நமது பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சிங்கவால் குரங்கு மற்றும் கருமந்தி, வெண்மந்தி, நாட்டுக் குரங்கு தேவாங்கு குரங்கு உட்பட ஐந்து வகையான குரங்கினங்கள் இப்பகுதியில் உள்ளது. இந்தக் குரங்குகளின் இயற்கை உணவான ஆல் அரசு, அத்தி மற்றும் இச்சி மரங்களின் இலை, துளிர், பூ, காய், பழம் இவற்றை சாப்பிட்டு வந்த குரங்குகள் இயற்கைக்கு மாறாக முற்றிலும் மறந்து சுற்றுலா பயணிகள் தங்கள் கொண்டுவந்த உணவு மற்றும் பாக்கெட் உணவுகளான காரம் உப்பு சுவை மிகுந்த நொறுக்குத்தீனிகள் மற்றும் சாக்லேட் வகைகளை கொடுத்து வருகின்றனர்.
இதனால் வனப்பகுதிக்குள் கிடைக்கும் உணவுப் பழக்கங்களை மறந்து தொடர்ந்து வனப்பகுதி சாலையில் சுற்றுலாப்பயணிகள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் உணவுகளை குரங்குகளுக்கு வழங்கப்படுவதால் சாலையில் அந்த உணவுகளை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் சாலையைக்கடந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகும் வன ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது டிசம்பர் மற்றும் ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்களில் குரங்குகளின் இனப்பெருக்க காலம் துவங்கி இருக்கும் காரணத்தால் குரங்குகளின் கர்ப்ப காலம் 170 நாட்கள் ஆகும். இந்த கர்ப்ப காலத்தில் குரங்குகளுக்கு இயற்கைக்கு மாறாக மனிதர்கள் உண்ணும் உப்பு, காரம் மற்றும் பாக்கெட் உணவுகளை கொடுக்கப்படுவதால் குரங்குகளின் உடலில் வழக்கமாக நடைபெறும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். அதேபோல் தோல் கல்லீரல் பாதிக்கப்படும் குறிப்பாக நொறுக்குத்தீனிகளை உட்கொள்ளும் குரங்குகளுக்கு கோடைகாலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையின்போது சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது என கூறியுள்ளார்.
மேலும் முழுமையாக மலட்டுத்தன்மையும் ஏற்படுவதாக வன ஆர்வலர்கள் மற்றும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியுள்ளார். இதனால் வனத்துறை சோதனைச் சாவடியை கடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகளை துன்புறுத்துதல் மற்றும் உணவு வழங்குதல் கூடாது என வனத்துறை சார்பாக பல முறை விழிப்புணர்வு செய்தும் எச்சரிக்கை விடுத்தும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை.
எனவே வனத்துறை கூறும் எச்சரிக்கைகளை மீறி வனவிலங்குகளை துன்புறுத்தி அதன் முன் நின்று புகைப்படங்கள் எடுத்தாலும் வனவிலங்குகளுக்கு உணவுகளை வழங்கினாலும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ளப்படும் என பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.