கோவை குற்றாலம்: கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது கோவை குற்றாலம். பல அடுக்குகளைக் கொண்ட அருவியின் அழகிய தோற்றத்தை இங்கே கண்டு ரசிக்கலாம். அருவியில் குளித்தும் மகிழலாம். இது கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் தான் கட்டப் பட்டுள்ளது.
ஊட்டி : கோயம்புத்தூரில் இருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம். பார்த்து ரசிக்கவும், உணர்ந்து மகிழவும், அனுபவித்து மெய் சிலிர்க்கவும் இங்கே ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன. ஆண்டு முழுவதும், குளிச்சி நிறைந்து காணப்படும் இப்பகுதி, தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் பாரம்பரியம் மிக்க மலை ரயிலில் பயணிப்பது அலாதியான இன்பம் கொடுக்கும்.
அமராவதி அணை: அழகும், பசுமையும் நிறைந்த இடம். கோயம்புத்தூரில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 50 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது அமராவதி அணை. இங்கே செல்ல பேருந்து வசதி இருக்கிறது. எனினும், சொந்த வாகனத்தில் செலவது நல்லது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையைக் கண்டு ரசிக்க மனம் லேசாகும்.
டாப் ஸ்லிப்: சாகசபயணம், மலையேற்றம், மலைப்பகுதி உலா போன்றவற்றுக்கு ஏற்ற சிறந்த இடம். கோயம்புத்தூரில் இருந்து 76 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2,554 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த டாப்ஸ்லிப் குன்னூர் அளவுக்கு சிறப்பானது இங்கே யானை சவாரி செய்யலாம். இது சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடமாகும்.
மங்களம் அணை: கண்ணுக்கு இனிய பசுமையுடன் அமைந்திருக்கும் இந்த அணை, கோயம்புத்தூரில் இருந்து 95 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாலாக்காட்டில் இருந்து 41 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அணையானது, செருக்குன்னப்புழா நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மான்கள், யானைகள் முதலிய பல காட்டு விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.
மலம்புழா அணை: மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அழகிய அணை, இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் மனதை கொள்ளை கொள்ளும். கோயம்புத்தூரில் இருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ரயில், பேருந்து, வாடகை வாகனங்களிலும், சொந்த வாகனத்திலும் சென்று வரலாம். இது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.