வால்பாறையை மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கின்றனர். இங்கே அமைந்துள்ள மலைத்தொடர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும். யானைகளின் நடமாட்டமும் இருக்கும். மேலும் தேயிலை தோட்டம், நீரூற்றுகள், அருவிகள் என பசுமையாகவும் ரம்யமாகவும் காட்சியளித்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து தன்வசப்படுத்துகிறது.
இந்நிலையில், இந்த பகுதியில் வனத்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா தலங்களிலும், வியாபார இடங்களிலும் பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய ஒரே வழித்தடம் தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ள மளுக்கப்பாறை வழி. கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், மற்றும் வால்பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் மளுக்கப்பாறை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.
இந்நிலையில், அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள அதிகாரிகள், தங்கும் விடுதி, லாட்ஜ், காட்டேஜ்களில் தங்கவரக்கூடிய சுற்றுலா பயணிகள், வால்பாறை பகுதியில் எங்கு சென்றாலும் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.