

நம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் திட்டம், காப்பான் தமிழக உரிமையை கைப்பற்றிய நிறுவனம், அருண் விஜய்யின் அடுத்த படம் உள்ளிட்ட சினிமா செய்திகளின் தொகுப்பு


சுசீந்திரன் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மிருணாளினி, நரேன் ஆகியோர் நடிப்பில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விஜய் சேதுபதி-ஸ்ருதிஹாசன் நடித்துவரும் 'லாபம்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஜனநாதன் இயக்க, விஜய் சேதுபதி புரோடக்ஷ்ன்ஸ் மற்றும் 7 சிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது


ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. நாடோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் சென்சாருக்காக காத்திருக்கிறது.


1998-ம் ஆண்டு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நித்யாமேனன் தனது ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அண்மையில் மிஷன் மங்கள் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ள நித்யா மேனனுக்கு "ஆரம் திருக்கல்பணா" என்ற மலையாளத் திரைப்படம் ஐம்பதாவது திரைப்படமாக வெளிவரவுள்ளது


நடிகர் அருண் விஜய் தனது 30-வது திரைப்படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்க உள்ளார். ஜிஎன்ஆர் குமரவேலினின் இயக்கத்தில் தயாராக உள்ள இந்த திரைப்படத்திற்கு சபீர் இசையமைக்க உள்ளதாகவும், திரைக்கதை த்ரீல்லிங்காக இருக்கும் என்றும் அருண் விஜய் கூறியுள்ளார்.


"நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படத்திற்காக அனிருத் குரலில் உருவாகி உள்ள காந்த கண்ணழகி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலுக்கு முன் அனிருத்தும் சிவகார்த்திகேயனும் செய்யும் சேட்டை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என வெற்றித் திரைப்படங்களை கொடுத்த வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரகுமான் 12 பாடல்கள் இசையமைக்கிறார். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் களமிறங்கும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.


மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "ஹீரோ" திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "ஹீரோ" திரைப்படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் "நம்ம வீட்டு பிள்ளை" இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.