நீங்கள் கடன் பெற விண்ணப்பம் செய்யும்போது, வங்கிகள் உங்களுக்கு ஒப்புதல் வழங்கும் முன்பாக சில ஆவணங்களை கேட்டு வாங்கி ஆய்வு செய்வார்கள். அப்படி உங்களிடமிருந்து பெறப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்று ஐடிஆர் தாக்கல் செய்ததற்கான சான்று ஆகும். பொதுவாக மாதாந்திர ஊழியர்களிடம் ஐடிஆர் தாக்கல் செய்ததற்கான சான்றுகள் இருக்கும்.
ஆனால், ஐடிஆர் தாக்கல் செய்ய தேவை இல்லாத, மாதாந்திர சம்பளம் அல்லாத வேறு வகையில் வருமானம் உடைய நபராக நீங்கள் இருப்பின், கடன் பெறுவதற்கான உத்தரவாதமாக வருமான ஆதாரத்தை தாக்கல் செய்வது சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் ஐடிஆர் தாக்கல் செய்யாமல் எப்படி கடன் பெறுவது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தனிநபர் கடன் : இது பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற கடன் முறையாகும். விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் கேஒய்சி விவரங்களை ஆய்வு செய்த பிறகு வங்கிகள் உடனடியாக இந்த கடனை வழங்குகின்றன. சில வங்கிகளில் இந்த கடன் பெறுவதற்கு குறைந்தபட்ச வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை நிபந்தனையாக விதிக்கப்படுகின்றன. உங்களுக்கு நிலையான வருமானம் இருந்து, ஏற்கனவே பெற்ற கடனை சரியாக திருப்பி செலுத்தியதற்கான ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் உங்களுக்கான கடன் உடனடியாக கிடைத்து விடும். நீங்கள் சுய வேலைவாய்ப்பு கொண்ட நபர் என்றால் உங்களின் வருமான ஆதாரம் மற்றும் வங்கி வரவு, செலவு கணக்கு விவரங்களை கொடுக்கலாம். அவை திருப்தி அளிக்கும் பட்சத்தில் உங்களுக்கான கடன் வழங்கப்படும்.
மற்றொரு விண்ணப்பதாரருடன் இணைந்து விண்ணப்பிக்கவும் : நீங்கள் மாதாந்திர சம்பளம் அல்லாத, தனிநபர் வருமானம் உடையவர் என்றால் மற்றொரு வழிமுறையை பின்பற்றி கடன் பெறலாம். ஐடிஆர் தாக்கல் செய்கின்ற மற்றொரு விண்ணப்பதாரருடன் இணைந்து நீங்கள் கூட்டு லோன் அப்ளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கான கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
மக்கள் உதவி மேலாளரை நாடவும் : ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதற்காக தனியொரு மேலாளரை நியமனம் செய்திருப்பார்கள். அவர்களை சந்தித்து உங்களது சூழ்நிலையை எடுத்துக் கூறவும். உங்களுக்கு எந்தெந்த வகையில் வருமானம் வருகிறது, கடன் திருப்பிச் செலுத்தும் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறி கடன் பெற முயற்சி செய்யலாம்.