கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான நிறுவனங்களில் வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றுகள் குறைந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை நிறுத்திவிட்டு, பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன.
ஆனால், சமீபத்திய நிலவரத்தின்படி, இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை கைவிட்டு ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் முடிவை நிறுவனங்கள் தற்போதைக்கு ஒத்திவைத்துள்ளன. அத்துடன், கொரோனா தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகளுக்காக நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
இன்னும் சில வாரங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்?தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நிறுவனங்கள், அடுத்த சில வாரங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை தொடரும்படி பணியாளர்களுக்கு வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “சூழ்நிலையை ஏர்டெல் நிறுவனம் கண்காணித்து வருகிறது. நாடெங்கிலும் உள்ள ஏர்டெல் அலுவலகங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்து வருகிறோம்’’ என்று கூறினார்.
பணியாளர்களுக்கு சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் கூறுகையில், “கொரோனா புதிய வேரியண்ட் வந்திருக்கும் நிலையில், தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக் கூடும். அடுத்த சில நாட்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து ஒன்றிரண்டு வாரங்கள் வொர்க் ஃபிரம் முறையை தொடர வேண்டியிருக்கும். அதற்கு தகுந்தாற்போல வீட்டில் உள்ள பணிச்சூழலை தயார் செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறப்பட்டிருந்தது.
நெஸ்ட்லே, அப்போலா டயர்ஸ் நிறுவனங்கள்: நெஸ்ட்லே நிறுவனம் ஹைப்ரிட் வொர்க் மாடலை தொடருவது என்று முடிவு செய்துள்ளது. தேவை ஏற்பட்டால் மட்டும் நிறுவனத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அப்போலா டையர்ஸ் நிறுவனத்தில், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிகின்றனர் என்றாலும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
ஐடி நிறுவனங்களில்: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஹைப்ரிட் வொர்க் மாடலை நீண்ட காலத்திற்கு தொடருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 95 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்கின்றனர். மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய 5 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகம் வருகின்றனர். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று கூறியுள்ள ஹெச்சிஎல் நிறுவனம், ஹைப்ரிட் வொர்க் மாடலை தொடருவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.