இந்திய பாரம்பரியத்தில், அதிலும் தமிழ் கலாச்சாரத்தில் தங்க நகைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். சேமிப்பு நோக்கத்தில், தங்க நகை அணிய வேண்டும் என்ற ஆசையில் அல்லது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் திருமணம், காதுகுத்து போன்ற விழாக்களின் தேவைகளுக்காக தங்க நகை வாங்குவதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.
என்றுமே நிலையான மதிப்பு கொண்டுள்ள தங்க நகைகளை வாங்குவதில் எந்தத் தவறுமே இல்லை. ஆனால், எந்த சமயத்தில் தங்கத்தின் மதிப்பு சீரான அளவில் இருக்கும் என்று நாம் கணித்து வாங்குவதில்லை. சில சமயம் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் நாம் தங்கம் வாங்குவது நமக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
உதாரணத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில், இதுவரை இல்லாத உச்சமாக, 24 காரட் தரம் கொண்ட 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.57,000 வரை தொட்டது. தற்போது கூட ஒரு கிராம் ரூ.5,700 என்ற அளவிலேயே நீடிக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கக் கூடிய 22 காரட் தரம் கொண்ட தங்கமும் ஒரு கிராம் ரூ.5,300க்கு மேற்பட்ட விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
தற்போதைய திருமண விழாக்கால நேரத்தில் தங்கம் வாங்குவது இன்றியமையாத தேவையாக இருக்கிறது. ஆனால், ஒரு நாளுக்கும், மற்றொரு நாளுக்கும் இடையே சராசரியாக ஒரு பவுன் தங்கத்திற்கு ரூ.300 முதல் ரூ.500 வரையில் விலை வித்தியாசம் வருகிறது. இத்தகைய நிலையில், தங்கம் வாங்குவதற்கு இது உகந்த சமயமா என்ற கேள்வி தொழில் சார்ந்த நிபுணர்களிடம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஒயிட் கோல்டு என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான ராகுல் ஜோசஃப் பதில் அளிக்கையில், “கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் விலை உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது 14 சதவீதம் விலை அதிகரித்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.59,290 என்ற அளவில் இருக்கிறது. நிலையான சொத்து என்று கருதப்படுவதால் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்க வரி அதிகரிக்கப்படுவதும் கூட விலை உயர்வுக்கு காரணம். ஒட்டுமொத்த உலகின் பொருளாதார சூழல் தற்போது சரிவை கண்டு வருகிறது. அதேபோல டாலரின் மதிப்பும் குறைந்து வருகிறது. புவி சார்ந்த அரசியல் காரணங்களால் உலகில் பதற்றம் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாதுகாப்பான சொத்து என்ற அளவில் தங்கம் பார்க்கப்படுகிறது. ஆகவே, இனி வரக் கூடிய ஆண்டுகளிலும் தங்கத்தின் மதிப்பு உயர்வாகவே இருக்கும்’’ என்றார் அவர்.
இன்னமும் விலை அதிகரிக்கும் : இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெருங்குவதற்குள் தங்கத்தின் மதிப்பு மென்மேலும் அதிகரித்திருக்கும் என்று நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நிதி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த நிஷா ஹர்ஷேகர், “கடந்த சில மாதங்களில் மற்ற அனைத்து பொருட்களை காட்டிலும் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.63,000 வரை அதிகரிக்கலாம். அதற்கு அடுத்த சில மாதங்களில் மீண்டும் ரூ.53,000 வரை இறங்கலாம்’’ என்று கூறினார்.