விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வருடத்தில் மூன்று தவணைகளில் இந்த தொகை வழங்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் முதல் தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இரண்டாவது தவணையும், டிசம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் மூன்றாவது தவணையும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் இதுவரை 13 தவணைகளாக தலா 26 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில், 14 வது தவணை தொகையை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 14வது தவணை மே 26 முதல் 31ம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இல்லையென்றால் ஜூன் மாதத்தில் இந்த பணத்தை விவசாயிகள் பெறலாம்.
இப்போது அடுத்த தவணையாக சுமார் 16 ஆயிரம் கோடியை டெபாசிட் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. கடுமையான நிதிச்சுமைகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கீழ் விவசாயிகள் விண்ணப்பிக்க விரும்பினால், PM Kisan-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.