இந்தியாவை பொருத்தவரை கார் என்பது அவசியத்திற்கான ஒன்று என்பதை விட பெரும்பாலும் ஸ்டேட்டஸ் சிம்பளாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டிவிட்டு ஒரு காரை நிப்பாட்டவில்லை என்றால் நல்லாவா இருக்கும்?.. இப்படி கேட்பவர்கள் அதிகம். அதனால் கடன் வாங்கியாவது ஒரு காரை வாங்கிவிட வேண்டும் என்று பலரும் கார் வாங்கிவிடுகிறார்கள். அப்படி காரை வாங்கிவிட்டு ஒழுங்காக மாத தவணை கட்டாவிட்டால் எளிதாக காரை தன் வசப்படுத்துவதற்கு வசதியாக கடன் வழங்கும் நிறுவனங்கள் காரின் ஸ்பேர் சாவியை தங்கள் வசம் வைத்துக் கொள்ளும்.
ஆனால் இப்போதெல்லால் முழுவதும் கனெக்டெட் தொழில்நுட்பத்தில் கார்கள் தயாரிக்கப்படுவதால் கார் உரிமையாளருக்குத் தெரியாமல் காரை சீஸ் செய்வது என்பது இயலாத காரியம். அதனால் முறையாக இஎம்ஐ கட்டாவிட்டாலும் உரிமையாளரின் ஒப்புதலோடு தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இதற்கு வரப்போகிறது முடிவு… ஆம் அதற்கு ஃபோர்டு நிறுவனம் தயாராக இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.
கனெக்டட் கார்களை உரிமையாளர்களுக்கே தெரியாமல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான காப்புரிமைக்காக அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அதன்படி ஒரு காரில் உள்ள ஏசி, எஞ்சின், டோர் ஆகியவற்றைச் செயல்படவிடாமல் ஆன்லைன் மூலமே லாக் செய்யும் தொழில்நுட்பம் தான் அது. இஎம்ஐ கட்டத்தவறிய கார் உரிமையாளர் காரை ஓட்டிக் கொண்டிருந்தால் காரின் ஏசியை ஆஃப் செய்வது, அதுவே காரை ஒரு இடத்தில் பார்க் செய்திருந்தால் எஞ்சின் மற்றும் டோரை இயக்க விடாமல் ஆஃப் செய்வது ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.
இப்பொழுது கடன் வாங்கி கார் வாங்கினால் பைனான்ஸ் நிறுவனத்திடம் இதற்கான அதிகாரம் இருக்கும். இதைக் கேட்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? ஃபோர்டு நிறுவனம் இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்காக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. இதை கார்களில் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.மேலும் இந்த தொழில்நுட்பத்திதை பயன்படுத்தி எஞ்சின், டோர், ஏசி மட்டுமில்லை… க்ரூஸ் கண்டரோல், விண்டோ ஆப்ரேட்டிங், கார் சாவி, ஆக்ஸிலரேட்டர் உள்ளிட்டவற்றையும் லாக் செய்ய முடியும்.
காரின் உரிமையாளர் இஎம்ஐ செலுத்தவில்லை என்றால் இதில் எதை வேண்டுமானாலும் பைனான்ஸ் நிறுவனத்தால் லாக் செய்ய முடியும். ஆனால் ஃபோர்டு நிறுவனம் இது குறித்து விளக்கமளித்த போது இப்படியான தொழில்நுட்பத்தை காருக்கு கொண்டு வர முடிவு செய்யவில்லை காப்புரிமைக்காக சில தொழில்நுட்பங்களை பதிவு செய்வது வழக்கம் அதன் அடிப்படையில் தான் இதைப் பதிவு செய்துள்ளோம்.