கடந்த சில நாட்களாக உலகத்தையே திருப்பி பார்க்க வைத்த ‘சிலிக்கான் வேலி பேங்க்’ என்ற பெயரை கேட்காதவர்களே இருக்க முடியாது. உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் அமெரிக்காவில் இருக்கும் இந்த வங்கியும் ஒன்று. 2008 ஆம் ஆண்டு வாஷிங்டன் மியூச்சுவல் என்ற வங்கி திவால் ஆனதற்குப் பிறகு, அமெரிக்க வங்கிகளின் வரலாற்றிலேயே சிலிக்கான் வேலி பேங்க் மற்றும் சிக்னேச்சர் ஆகிய இரண்டு வங்கிகளும் திவாலான இரண்டு பெரிய வங்கிகளாக பட்டியலில் இணைந்துள்ளது.
சிலிக்கான் வேலை வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும், பாரம்பரியமாக ஒரு வங்கியை எவ்வாறு நடத்த வேண்டும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று பாடப்புத்தகத்தில் சேர்க்கும் அளவுக்கு வெற்றிகரமாக பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் வங்கிகளில் தாங்கள் செலுத்தியிருந்த முதலீடுகளை திரும்பப் பெற்றதன் காரணமாக இரண்டு வங்கிகளுமே மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. கான்வெர்சேஷன் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க வங்கிகளின் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டு பெரிய வங்கிகளின் வீழ்ச்சி இதுதான் என்று கூறப்படுகிறது.
சிலிக்கான் வேலி வங்கி திவாலானதுக்கு எவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம் : ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது : CNN செய்திகள் வெளியிட்ட அறிக்கையின் படி, கிட்டத்தட்ட ஸீரோ வட்டி விகிதங்கள் இருந்த காலத்தில், வங்கி, அமெரிக்க அரசாங்க பத்திரங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்திருந்தது. இவை மிகவும் பாதுகாப்பு என்று கருதப்பட்ட நேரம், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைத் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்தியதால் பாதுகாப்பான முதலீடு தலைகீழாக மாறியது.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, பத்திரங்களின் மதிப்பு குறையும். எனவே வட்டி விகிதங்கள் அதிகரிப்பு சிலிக்கான் வேலி வங்கியின் பாண்டின் மதிப்பை குறைத்தது. அதே நேரத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டியின் அதிகரிப்பு என்பது வாங்கும் பலவிதமான செலவினங்களை அதிகரித்தது. குறிப்பாக தொழில்நுட்ப வணிகங்கள், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அதிக பணத்தை ஒதுக்குமாறு ஒரு நிர்பந்தத்தை உருவாக்கியது. அதே நேரத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கான முதலீட்டு தொகையை திரட்டுவதற்கும் கடினமாக இருந்தது. எனவே பல நிறுவனங்களும் SVBஇல் முதலீடு செய்து வைத்திருந்த டெபாசிட்களை வளர்ச்சி மற்றும் வெவ்வேறு செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நஷ்டத்துக்கு விற்கப்பட்ட வங்கியின் பங்குகள் : கடந்த காலத்தில் சிலிக்கான் வேலி வங்கி ஒரு சில முதலீடு தவறுகளை செய்திருந்தது. இப்போது நடந்த பிரச்சனைக்கான காரணங்களாக இருந்தாலும், கடந்த வாரம், வங்கியின் பங்குகள் நஷ்டத்துக்கு விற்கப்பட்ட விவரங்கள் வெளியானதை அடுத்து, வங்கியின் வீழ்ச்சி தொடங்கியது. மேலும், நிதி பற்றாக்குறையை சமாளிக்க $2.25 பில்லியன் மதிப்புக்கு புதிய பங்குகளை விற்க இருப்பதாகவும் அதே நேரத்தில் அறிவிப்பு வந்தது. அதை அடுத்து, பதற்றம் அடைந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், உடனடியாக பணத்தை திரும்பப் பெறத் தொடங்கினார்கள். இதனால், மிகப்பெரிய தொகை வங்கியிலிருந்து வித்டிரா செய்யப்பட்டது. கடந்த வியாழன் அன்று வங்கியின் பங்குகளின் மதிப்பு 60% சரிந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிதி நெருக்கடி மீண்டும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில், போட்டி வங்கியின் பங்குகளின் மதிப்பும் மளமளவென்று சரிந்தது.
பங்கு வர்த்தகம் தடை : பங்குகளின் மதிப்பு சரிந்த அடுத்த நாள், அதாவது வெள்ளியன்று வங்கியின் பங்குகளில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டது. எனவே, நிறுவனம் முதலீட்டை திரட்ட அல்லது முதலீட்டாளரை கண்டறியும் முயற்சிகள் தடையாகின. மேலும், கலிஃபோர்னியா கட்டுப்பாட்டாளர்கள் தலையிட்டு, உடனடியாக வங்கியை மூடினார்கள். அதையடுத்து, பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் கீழ் ரிசீவர்ஷிப்பில் வைத்தனர். இவ்வாறு செய்யும் போது, பொதுவாக டெபாசிடர்கள் மற்றும் கடனாளிகளுக்கு திருப்பிச் செலுத்த வங்கியின் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும்.
சொத்துகளை விற்பதில் உள்ள அபாயம் : கடன்களை அடிக்க சொத்துகளை விற்பனை செய்தாலும், கடனாளிக்கு செலுத்த வேண்டிய அளவுக்கு பணப்புழக்கம் இருக்காது, நஷ்டத்துக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை தான் பணப்புழக்க அபாயம் / Liquidity risk என்று கூறப்படுகிறது. எனவே, இதன் படி, வங்கியின் சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணம், கடன்களுக்கு திருப்பிச் செலுத்த போதுமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
உதாரணமாக, உங்களிடம் 10 லட்ச ரூபாய் சேமிப்பு இருக்கிறது. அதில் நீங்கள் 7 லட்சம் எடுத்து நிலம் வாங்குகிறீர்கள். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே உங்களுக்கு ஒரு அவசர கால செலவாக மொத்த சேமிப்பு தொகை தேவைப்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் தான் பணப்புழக்க அபாயம் என்று கூறப்படுகிறது. அதாவது, பெரிய தொகை நிலத்தில் முடக்கப்பட்டுள்ளது, அதை உடனடியாக பணமாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தான் வங்கிக்கும் ஏற்பட்டுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கியின் வாடிக்கையாளர்கள், தொடர்ந்து தங்கள் டெபாசிட்டுகளை வித்டிரா செய்த நிலையில், அவர்களுக்கு செலுத்த ரொக்கமாக பணம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவற்ற, $21 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை, $1.8 பில்லியன் நஷ்டத்துக்கு விற்பனை செய்தது. தங்களின் முதலீட்டுத் தொகையிலிருந்து பணம் குறைந்ததால், நிறுவனம் கூடுதலாக புதிய முதலீடாக $2 பில்லியன் பெற வேண்டிய சூழலை உண்டாக்கியது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்த சிலிக்கான் வேலி வங்கி : மீண்டும், சிலிக்கான் வேலி வங்கி, தனது வாடிக்கையாளர்களிடம் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்ய அழைத்தது. ஆனால், வாடிக்கையாளர்கள் வங்கியின் மீதான நம்பிக்கையை இழந்து, பணத்தை மீண்டும் திரும்பப் பெறுவதிலேயே குறியாக இருந்தனர். இவ்வாறு நடந்தால், எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வரும் வங்கியாக இருந்தாலும், திவாலாக சில நாட்கள் கூட ஆகாது.சிலிக்கான் வேலி வங்கியைப் பொறுத்தவரை, வங்கியின் பல வாடிக்கையாளர்கள் $250000க்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்திருந்தார்கள்.
சிலிக்கான் வேலை வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும், பாரம்பரியமாக ஒரு வங்கியை எவ்வாறு நடத்த வேண்டும் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று பாடப்புத்தகத்தில் சேர்க்கும் அளவுக்கு வெற்றிகரமாக பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் வங்கிகளில் தாங்கள் செலுத்தியிருந்த முதலீடுகளை திரும்பப் பெற்று, இரண்டு வங்கிகளுமே மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. கான்வெர்சேஷன் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க வங்கிகளின் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டு பெரிய வங்கிகளின் வீழ்ச்சி இதுதான் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த வரம்புக்கு மேல் டெபாசிட் செய்திருந்த முதலீடுகள், டெபாசிட் ஃபெடரல் டெபாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப் நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. எனவே, வங்கி திவாலானால், தங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்காது என்பதை வாடிக்கையாளர்கள் உணர்ந்தனர். 88% டெபாசிட்டுகளுக்கு காப்பீடு செய்யப்படவில்லை என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இதே போன்ற சிக்கலைத் தான் சிக்னேச்சர் வங்கியும் எதிர்கொண்டது சிக்னேச்சர் வங்கியில் 90% டெபாசிட்டுகள், காப்பீடு செய்யப்படவில்லை. சிலிக்கான் வங்கியின் வீழ்ச்சி, சிக்னேச்சர் வங்கியின் வாடிக்கையாளர்களையும் தூண்டியது.
இந்த அபாயம் பொதுவானதா ? ஃபெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு காரணமாக அனைத்து வங்கிகளும் தங்களுடைய சில பங்குகளில் அபாயத்தை எதிர்கொள்வதாக கான்வர்சேஷன் தனது அறிக்கையில் கூறுகிறது. இதன் விளைவாக, கடந்த டிசம்பர் 2022 நிலவரப்படி வங்கி இருப்புநிலைக் குறிப்பில், கிட்டத்தட்ட $620 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் இதனால் ஏற்படக்கூடிய பணப்புழக்க அபாயத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் விதிமுறைகளை முறையே பின்பற்றிய சிலிக்கான் வேலி மற்றும் சிக்னேச்சர் வங்கிகள், துறையில் சராசரியாக குறிப்பிடப்படும் அளவுக்கு தங்களுடைய சொத்துக்களை முறைப்படுத்தவில்லை. சொத்து மதிப்பில் சராசரியாக 13% ரொக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலையில், 5% ரொக்கமாக சிக்னேச்சர் வங்கியும், 7% ரொக்கமாக சிலிக்கான் வேலி வங்கியும் வைத்திருந்தது.
குறைவான ரொக்க இருப்பும், அதிக பங்குகளும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் : வங்கியின் மதிப்பும், செயல்பாடும் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், சராசரி மதிப்பை விட குறைவான அளவு ரொக்க இருப்பும், கணக்குகளில் அதிக பங்குகளையும் வைத்திருந்ததால், திடீரென்று வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்ப பெற்றதால் பணப்புழக்கம் குறைந்தது.ஆனால், இப்போது வரை கிட்டத்தட்ட $1 டிரில்லியன் மதிப்புள்ள வங்கி டெபாசிட்டுகளுக்கு காப்பீடு இல்லை. எனவே, வங்கி சார்ந்த நெருக்கடிகள் இன்னும் பல நேரிட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.