மக்கள் தங்கள் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்கிகளில் நிலையான வைப்புத் திட்டங்களைத் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் அதிக வருமானத்தை கொடுக்கும் சிறந்த வங்கிகளைத் தேர்வு செய்வது அவசியமாக உள்ளது. வருமானத்தைப் பொறுத்தவரை, சிறு சேமிப்பு வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அதிக நன்மைகளை வழங்குகின்றன.
ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி உரிமத்தைப் பெற்ற பிறகு, SBM வங்கி (இந்தியா) டிசம்பர் 1, 2018 அன்று தனது செயல்பாட்டைத் தொடங்கியது. சிறு வணிகங்கள், குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் (MSMEs), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), சில்லறை வணிகம் மற்றும் பெரிய நிறுவனங்கள் உட்படப் பல வாடிக்கையாளர்களுக்கும் இந்த வங்கி சேவை வழங்கி வருகிறது.
எஸ்பிஎம் வங்கி இந்தியா முழுவதும் 11 கிளைகளை கொண்டுள்ளது. இந்த வங்கி மொரிஷியஸில் அமைந்துள்ள எஸ்பிஎம் ஹோல்டிங்ஸின் ( BM Holdings) துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஎம் குழுமம் என்பது ஒரு நிதிச் சேவைக் குழுவாகும். இது வைப்புத்தொகை, கடன்கள், வணிகங்களுக்கான நிதி மற்றும் அட்டைகள் போன்ற சேவைகளை வழங்குகிறது.
எஸ்பிஎம் வங்கி தற்போது அதன் நிலையான வைப்புத் திட்டங்களில் பல்வேறு வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7-90 நாட்களில் முதிர்ச்சியடையும் உள்நாட்டு வைப்புகளுக்கு, இந்த வங்கி 4.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 91-120 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, 4.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 121-180 நாட்களுக்கு இடைபட்ட டெபாசிட்டுகளுக்கு 5% வட்டி விகிதத்தை இந்த வங்கியில் வழங்குகின்றனர். மேலும் 181 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான வைப்புகளுக்கு வட்டி விகிதமாக 6.55% வழங்கப்படுகிறது. 1 வருடத்தில் இருந்து 389 நாட்கள் மற்றும் 390 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு முறையே 7.05% மற்றும் 6.50% வட்டி கிடைக்கிறது.
இந்த வங்கி தற்போது 391 நாட்களில் இருந்து 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.05% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே போன்று, 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் மற்றும் 2 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. எஸ்பிஎம் வங்கி 3 ஆண்டுகள் மற்றும் 2 நாட்கள் வைப்புகளுக்கு 7.4% வட்டி விகிதத்தையும், 3 ஆண்டுகள் மற்றும் 2 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 8.35% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு தற்போது 7.75% வட்டி விகிதம் கிடைக்கிறது. மேலும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு உள்ள டெபாசிட்டுகளுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.