உங்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடியான சூழல் வரக் கூடாது என்றால், வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்து கொண்டு, கடன் வாங்காமல் வாழ்வதே மிக சிறப்பான வழிமுறையாகும். ஆனால், என்னதான் திட்டமிட்டு வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், ஏதோவொரு காலகட்டத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரித்து, கடன் வாங்குவதற்கான தேவையை உருவாக்கி விடுகிறது.அவசர காலங்களில் பணத் தேவை நிறைவு செய்ய உறவினர்கள் அல்லது நண்பர்களின் உதவியை நாம் நாடுகிறோம். சிலர் பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்ற வழிமுறைகளைக் கையாண்டாலும், பெரும்பாலானோர் தேர்வு செய்யக் கூடிய முதன்மையான வாய்ப்பாக தங்க நகைக்கடன் திட்டம் இருக்கிறது.
இதுகுறித்து சாஹிபந்து என்ற நிதி ஆலோசனை நிறுவனத்தின் இணை நிறுவனரும், முதன்மை விற்பனை பிரிவு அதிகாரியுமான விஜய் மல்ஹோத்ரா கூறுகையில், “அவசரகாலம் எப்போது வேண்டுமானாலும் வரும். அத்தகைய சூழலில் செலவுகளை சமாளிக்க மக்கள் கடன் பெறுகின்றனர். மருத்துவ தேவையாக இருக்கலாம் அல்லது குழந்தைகளின் கல்விச் செலவாக இருக்கலாம் அல்லது திருமண செலவு அல்லது புதிய வணிகத்திற்கான முதலீட்டு தேவை என எதுவானதாகவும் இருக்கலாம். பெரும்பாலான இந்திய குடும்பங்களில் தங்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் அடிக்கடி பயன்படுத்தாத நகைகளை, அவசர காலங்களில் அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
உடனடி ஒப்புதல் மற்றும் பண விநியோகம் : உடனடி பண தேவைக்கான எளிய தீர்வாக தங்க நகைக்கடன் திட்டம் இருக்கிறது. குறிப்பாக, இப்போதெல்லாம் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க முடியும். நீங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்றும் விண்ணப்பிக்கலாம். எப்படி இருந்தாலும் உங்கள் விண்ணப்பம் 30 நிமிடங்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, கொடுக்கும் தங்கத்திற்கு ஏற்ப கடன் பணம் வழங்கப்படும்.
தகுதி நிபந்தனைகள் எளிமையானவை : மற்ற கடன் வாய்ப்புகளை ஒப்பிடுகையில், தங்க நகைக்கடன் பெறுவது எளிமையான வழிமுறையாக இருக்கிறது. கடந்த காலங்களில் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்திய வரலாறு அல்லது வருமான ஆதாரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால், விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோரை கூட ஆய்வு செய்யாமல் தங்க நகைக்கடன் வழங்கப்படுகிறது.
அதிக கடன் மதிப்பு : அவசரமான மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளும்போது பணத் தேவைகள் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் உடனடி கடன் பெறவும், நாம் கொடுக்கும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத பணத்தை கடனாக பெறவும் வழிவகை இருக்கிறது. ஆக, உங்கள் தேவை, உங்களிடம் உள்ள தங்க இருப்பு ஆகியவற்றை மனதில் வைத்து எவ்வளவு பணம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
குறைவான வட்டி விகிதம் : கிரெடிட் கார்டு, பெர்சனல் லோன், வீட்டுக்கடன் போன்றவற்றை ஒப்பிடும்போது தங்க ந்கைக்கடன் திட்டத்தில் வட்டி குறைவாக வசூல் செய்யப்படுகிறது. ஆக, ஒட்டுமொத்தமாக நீன்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையும் குறைகிறது. வணிகத்தை விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள், சொத்து வாங்குவதற்கு கொஞ்சம் பண தேவைப்படுகின்ற நபர்கள் தங்க நகைக்கடன் திட்டத்தை அணுகலாம்.
எளிதில் திருப்பிச் செலுத்தலாம் : பிற வகைகளில் நீங்கள் கடன் பெறும்போது, மாதாந்திர ஈஎம்ஐ மூலமாக கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், தங்க நகைக்கடன் திட்டத்தில் மாதாந்திர வட்டித் தொகையை மட்டும் நீங்கள் கட்டினால் போதுமானது. உங்களுக்கு எப்போது முழுமையான அசல் தொகை சேமிக்க முடிகிறதோ, அதுவரையில் வட்டியை கட்டி கடனை நீட்டித்துக் கொள்ளலாம் .