சேமிப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படை செயல்பாடுகளில் ஒன்று என்றே கூறலாம். அரசாங்க பணியாளர்கள் உள்பட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் எதிர்கால தேவையை நிவர்த்தி செய்ய மற்றும் வருமான வரிச் சலுகைப் பெற வேண்டும் என்றால் அதற்குரிய சேமிப்பில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்காகவே நம்பகமான முதலீடு மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80C இன் படி ரூ.1.5 லட்சம் வரையிலான வருமானத்தை வழங்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக சேமிப்புத்திட்டங்கள் உள்ளன. இதோ அதன் முழு விபரம் இங்கே..
வரிச் சலுகைகளை வழங்கும் 5 அஞ்சல் அலுவலக திட்டங்களின் விபரங்கள்… தேசிய சேமிப்பு திட்டம் (National saving scheme): தபால் நிலையங்களில் உள்ள தேசிய சேமிப்பு திட்டமானது 5 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்துடன் வழங்கப்படுகிறது. தனிநபர்கள் சிறிய அல்லது நடுத்தர அளவிலான சேமிப்பை மேற்கொள்ள, இந்த சேமிப்பு திட்டம் பேருதவியாக உள்ளது. ரூ. 100 முதல் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்ய முடியும். இதோடு இதற்கு வருமான வரி சலுகையையும் கிடைக்கப்பெறும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) : நீண்ட கால முதலீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி சிறந்த தேர்வாக இருக்கும். தபால் அலுவலகங்களில் பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் என்றும் ஆண் குழந்தைகளுக்கு பிபிஎஃப் என்ற பெயரிலும் செயல்பட்டுவருகிறது. குழந்தைகள் தவிர பெரியவர்களும் இதில் முதலீடு செய்துக்கொள்ளலாம். குறைந்த பட்சமாக ரூ. 500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ள முடியும். முக்கியமாக PPF மீதான வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்படுவது இதன் சிறப்பாக உள்ளது. இதோடு பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரிவிலக்கு பெறவும் தகுதியுடையது.
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (டிடி) : போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் பல்வேறு காலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், தபால் அலுவலக நேர வைப்புத்தொகை போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்கின்றன.. குறைந்தபட்ச முதலீடு ரூ 1,000 மற்றும் இதற்கு வரம்பு இல்லை. கணக்கு வைத்திருப்பவரின் சேமிப்புக் கணக்கில் ஆண்டு வட்டியுடன் வரவு வைக்கப்படும். இந்த காலாண்டின் தற்போதைய விகிதங்களின்படி 5 வருட கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாக உள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) : பெண் குழந்தைகளின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டுள்ள திட்டம் என்றால் இது சுகன்யா சம்ரித்தி யோஜனா. 10 வயதிற்கு குறைவான குழந்தைகளின் பெயரில் நீங்கள் சேமிப்புக் கணக்கைத் தொடங்க முடியும். குறைந்த பட்சம் குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை இதில் நீங்கள் முதலீடு செய்துக்கொள்ளலாம். வட்டியும் அதிகளவில் வழங்கப்படுவதோடு பிரிவு 80 சி ன் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்(SCSS) : தபால் நிலையத்தில் சீனியர் சிட்டிசன்களின் நலனுக்காகவே உள்ள திட்டங்களில் ஒன்று தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இதில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர் அல்லது 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 60 வயதுக்குக் குறைவான மற்றும் ஓய்வு பெற்ற எந்தவொரு தனிநபரும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தின்படி குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ளலாம்.. இந்தத் திட்டமானது ஐந்தாண்டு காலத்தைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த சேமிப்புக் கணக்கை நீங்கள் நீட்டித்துக்கொள்ள முடியும். இதற்கு வருமான வரிச் சலுகையும் உள்ளது.