இந்த நிலையில், ஊழியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி தரக் கூடிய நடவடிக்கை ஒன்றை மெட்டா நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இதுகுறித்து, ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், “நமது குழுவில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஊழியர்களை குறைத்துக் கொள்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அத்துடன் இதுவரை நியமிக்கப்படாமல் இருந்த 5 ஆயிரம் பணியிடங்களை அப்படியே விட்டுவிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க் ஜூகர்பெர்க் மேலும் கூறுகையில், “எதிர்கால மனித தொடர்புக்கான கட்டமைப்பை மெடா நிறுவனம் கட்டமைத்து வருகிறது. அந்த வகையில் நமது திறனை மேம்படுத்தும் வகையிலான சில தகவல்களை இன்றைய தினம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். அந்த வகையில் பின்வரும் இலக்குகளை அடைய திட்டமிட்டிருக்கிறோம். 1) சிறந்த தொழில்நுட்ப நிறுவனமாக நாம் மாற வேண்டும். 2) நீண்ட கால இலக்குகளை அடையும் வண்ணம் இந்த கடினமான சூழலில் நமது நிதித்திறனை மேம்படுத்த வேண்டியிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.
என்னென்ன மாற்றங்கள் நிகழும் : கடினமான சூழலுக்கு தகுந்தாற்போல மெடா நிறுவனத்தை தகவமைத்துக் கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் குறைந்த முன்னுரிமை கொண்ட ப்ராஜக்டுகளை ரத்து செய்வது, புதிய பணியாளர் நியமன நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது, நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஊழியர் குழுவின் பலத்தை குறைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதுநாள் வரையிலும் நிறுவனத்தின் வெற்றிக்கு உதவிய திறமை மிகுந்த மற்றும் ஆர்வம் மிகுந்த ஊழியர்களுக்கு இந்த கடினமான சூழலில் வேறு வழியின்றி குட்பை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், ஊழியர்களின் முயற்சிகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல விரும்புவதாகவும் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.